Disadvantages of Drug Addiction in Tamil | போதை பழக்கம் – மாணவர்கள் எப்படி அடிமையாகிறார்கள்?
Disadvantages of Drug Addiction in Tamil
READ ALSO THIS | Adolescent Problem in Tamil – குழந்தைகள் வளரிளம் பருவம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?
எந்த ஒரு பழக்கத்திற்கும் அடிமையாகிவிட்ட யாரும் அந்தப் பழக்கத்தை தொடங்கும்போது, அதற்கு அடிமையாக வேண்டும் என்று நினைத்து தொடங்குவதில்லை. பழக்கம் எப்படி போதையாகிறது என்பதை நாம் கருத்தியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு செயல் நமக்கு எப்படி பழக்கமாக மாறுகிறது?
காலையில் எழுந்தவுடன் தினமும் காபி குடிப்பது, இரவு மொபைல் பார்ப்பது, டிவி சீரியல்கள் பார்ப்பது –இவை எப்படி அன்றாட நடைமுறை ஆகிறது? இவற்றை செய்யும்போது மூளைக்குள் ஒரு வெகுமதி, சந்தோஷம், துள்ளல் போன்ற உணர்வு வருகிறது. இதை நாம் நம்பத் தொடங்கியபின், காபி குடித்தால்தான் உற்சாகம், டிவி சீரியல் பார்த்தால்தான் மகிழ்ச்சி என்று மூளை தானாகவே எண்ணத் தொடங்கி விடுகிறது.
நம் உடலில் உள்ள சுரப்பிகளில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள்தான் நம்முடைய பல செயல்பாடுகளுக்கு காரணமாகிறது. நம் மூளையில் இருந்துதான் நாம் சந்தோஷத்தை உணர்கிறோம். பிட்யூட்டரி சுரப்பி சந்தோஷம் என்ற உணர்வை வெகுமதியாக உடல் முழுவதும் கொண்டு செல்கிறது.

சிலருக்கு மதிய உணவிற்குப் பிறகு ஏதாவது இனிப்பு சாப்பிடத் தோன்றும். அது பிடித்துப் போனபிறகு ஒவ்வொருமுறை மதிய உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவது தவிர்க்க முடியாத பழக்கமாகிவிடும். இது பிறகு மற்ற நேரங்களுக்கும் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிடும். நம் வாழக்கையோடு இன்று ஒன்றாகிப்போன மொபைல் பழக்கம் எப்படி நம்மை ஆட்டுவிக்கிறது என்பதை புரிந்துகொண்டாலே அவர்களை உங்களுக்கு புரிந்துகொள்வது சாத்தியப்படும்.
தனியாக இருக்குமிடத்திலும் சரி, நாலு பேர் இருக்குமிடத்திலும் சரி, மற்றவர்களோடு பேசுவதை விட நம் மொைபலோடுதான் நம் பொழுது கழிகிறது. யோசித்து பாருங்கள் முன்பு நம் உலகில் என்னவெல்லாம் இருந்தது வீடு, நண்பர்கள், பாட்டு கேட்பது, விளையாடுவது, பிடித்தவர்களோடு நேரடியாகப் பொழுதை கழிப்பது. இன்று எல்லாவற்றையும் மொபைல் பழக்கம் முழுங்கிவிட்டது.
இதேபோல்தான் இளையோரின் போதை பொருள் பழக்கமும்.
• பரிசோதனை செய்துதான் பார்ப்போமே என்று தொடங்கி இருக்கலாம்
• நண்பர்களின் வற்புறுத்தலால் தொடங்கி இருக்கலாம்
• ஒரு சோகமான தருணத்தை வென்றெடுக்க உதவும் என்று நண்பர்கள் கூறி இருக்கலாம்.
வெவ்வேறு விதமான போதை பொருட்கள் நம் மூளையில் வெவ்வேறு விதமாக செயல்படுகின்றன. போதை பொருட்கள் நம் மூளைக்குள் போய் என்ன செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான் போதை பழக்கத்திற்கு அடிமையாவது ஏன் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
• போதை பொருட்கள் சந்தோஷமாக நம்மை உணரச் செய்யும் வேதிப் பொருட்களை மூளைக்குள் செயற்கையாக உருவாக்குகிறது. இந்த சந்தோஷமான உணர்விற்குள் ஆட்பட்டவர்களால் அதிலிருந்து மீள முடிவதில்லை.
• முதலில் சிறிய அளவிலான பொருளை உட்கொள்ளுவதிலேயே இந்த இன்பம் கிடைத்துவிடுகிறது. ஆனால் நாளாக, நாளாக இத்தகைய பொருளுக்கு மூளை பழக்கப்பட்டுவிட்டதால் உருவாகும் வேதிப்பொருளின் அளவு குறைகிறது. அதிகப்படியான அளவை உட்கொள்ளும்போதுதான் சந்தோஷம் கிடைப்பதாக உணர்வார்கள்.
நாளாக, நாளாக அளவை அதிகரிப்பதோடு, அடிக்கடி உட்கொள்ளுவதன் மூலமே இந்த சந்தோஷ உணர்வு கிடைப்பதாக மாறிவிடும். இந்த விஷயத்திற்கு மூளை முன்னுரிமை கொடுக்க ஆரம்பிக்கும். பிற செயல்பாடுகளில் ஈடுபடுவது (படிப்பது, விளையாடுவது, பிறவைரடு பேசுவது) குறையத் தொடங்கும்.
போதைபொருள் ஆபத்து
அதிகப்படியான போதை பொருள், அதிகப்படியான பயன்பாடு – இவை போதைக்கு அடிமையாக்கிவிடும். போதை மருந்து தரக்கூடிய தாக்கம் இல்லாதபோது சோகமாவார்கள். மற்றவர்களிடமிருந்து விலகுவார்கள், பதட்டம் அடைவார்கள். முன்புபோல் போதை பொருட்களை பயன்படுத்துவது சந்தோஷத்தை தராது. ஆனால் நிறுத்திவிட்டாலோ விடுபட்டதால் வரக்கூடிய அறிகுறிகள் வரும். நடுக்கம், உடல்வலி, வாந்தி எடுக்கும் உணர்வு, மனச்சோர்வு, எரிச்சல், தவிப்பு, இப்போது அந்த நபர் மகிழ்ச்சிக்காக போதை பொருள் பயன்படுத்துவதைவிட, நிறுத்திவிட்டால் வரும் பின்விளைவுகளை தவிர்க்கவே அதைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்.
போதை பொருள் ஜாலியானதாக இருந்ததுபோய், விட்டாலும் துயரம், தொடர்ந்தாலும் துயரம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.