கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வட்டாரத்தில் பணியாற்றும் வட்டார கல்வி அலுவலக பணியாளர் ஒருவர், நேரடியாக அதே வட்டாரத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியரை தொலைபேசியில் அழைத்து, தேர்வு நிலை பணபலன்கள் பெற்றுத்தர ரூ 2ஆயிரம் கேட்டுள்ளார். வேறு வழியின்றி, அந்த ஆசிரியரும் குகுள் பே மூலம் பணத்தை அனுப்பியுள்ளார். இந்த நிலையில், பணம் கொடுப்பது தொடர்பாக ஆடியோ ஒன்று ஆசிரியர் குழுவில் பரவியது. மேலும், அந்த ஆசிரியர் தரப்பிலும், அவர் சார்ந்த ஆசிரியா் சங்கத்தினர் தரப்பிலும் லஞ்சம் கேட்டததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இருதரப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் லஞ்சம் கேட்ட பணியாளருக்கு ஆதரவாக அவர் சார்ந்த சங்கம் நிற்பதால், கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. லஞ்சம் கேட்டதற்கான ஆணை, பணம் அனுப்பியதற்கான சான்று ஆதரமாக உள்ள நிலையில், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.