Cyber Security Course in Tamil | சைபர் செக்யூரிட்டி படிப்பு | சைபர் செக்யூரிட்டி கோர்ஸ்
Cyber Security Course in Tamil
நவீன எண்ம உலகில் வாழும் நாம், தொழில், வர்த்தகம், கல்வி, போக்குவரத்து, வங்கி சேவை என அனைத்துக்கும் இணைய பரிமாற்றத்தையே நம்பியிருக்கிறோம். எனினும், கைதேர்ந்த நிபுணர்கள் நினைத்தால் இந்த சேவைகளை சீர்குலைக்கவும் முடியும். இதிலிருந்து நம்மை காக்கும் துறையே சைபர் செக்யூரிட்டி எனப்படும் இணைய பாதுகாப்பு துறை. இதுதொடர்பான படிப்புகள் இப்போது முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸப், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பல நன்மைகளை செய்தாலும் அவற்றால் விளையும் சமூக சீரழிவுகளும் தொடர்கின்றன. இணையவழி குற்றப்பதிவுகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதை தடுத்தாக வேண்டியிருக்கிறது. இணையத்தில் உள்ள அற்புதமான வசதிகளை போலவே, அதில் குற்றங்களும் (சைபர் கிரைம்) அபாயமும் அதிகமாக உள்ளது. சைபர் அட்டாக்ஸ் எனப்படும் இணையவழி தாக்குதல்களில் மால்வேர், பிஷ்ஷிங், பாஸ்வோர்டு அட்டாக், மால்அட்வர்டைசிங், ரோக் சாப்ட்வேர் என பல வகைகள் உள்ளன.
Read Also: Artificial Intelligence in Tamil
கணினி உதவியுடன் நடத்தப்படும் தாக்குதலாகவும், சில நேரம் கணினியை இலக்காக வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதலாகவும் சைபர்கிரைம்கள் அமைகின்றன. பிளாக்ஹேட், ஓயிட்ஹேட், சூசைடு ஹேட் என வெவ்வேறு ஹேக்கர்கள் உள்ளனர். நாள்தோறும் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட மால்வேர்கள் சைபர் தாக்குதலாக உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் பல கோடி டாலர்கள் திருடப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் முதல் தனிநபர் தகவல்கள் வரை சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகி தகவல் எடுக்கப்படுகின்றன.
சைபர் செக்யூரிட்டி படிப்பு
இந்தியாவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், தொழிற்சாலைகள், காவல் துறை, குற்ற தடவியல் துறை மற்றும் அரசு பொதுத்துறை, தனியார் நிறுவனங்களின் கணினி துறைகள் அனைத்தும் இணைய வழி குற்றங்களால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் சைபர் செக்யூரிட்டி மிகவும் முக்கியத்தும் பெறுகிறது. சாப்ட்வேர், ஹார்வடுவேர், டேட்டா, நெட்வொர்க் போன்றவற்றை இணையவழி தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே சைபர் செக்யூரிட்டியின் நோக்கம்.
இத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இதில் தேர்ந்த நிபுணர்கள் குறைந்த எண்ணிகையிலேயே இருப்பதால், அதிக சம்பளம் பெறலாம். பணி உயர்வுக்கான வாய்ப்பும் அதிகம். எனவே, தாராளமாக சைபர் செக்யூரிட்டி படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். இதற்கு ஏதேனும் ஒரு புரோகிராமிங் லாங்குவேஜ் (பைத்தான், நெட், பாஷ்) தெரிந்திருப்பது நல்லது. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவங்களிலும் விஐடி, அமிர்தா உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்களிலும் பி.டெக், சைபர் செக்யூரிட்டி படிப்பு வழங்கப்படுகிறது. பெங்களூரு சாப்ட்வேர் அண்ட் சிஸ்டம்ஸ் அனலாக் டிவைசஸ் நிறுவனமும் இந்த படிப்புகளை வழங்குகிறது.
எம்பெடட் சிஸ்டம்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய மூன்று துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இத்துறைகளில் புதிதாக 60 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி படிப்பை பின்புலமாக கொண்டவர்கள் எம்பெடட் சிஸ்டம் படிக்கலாம். அடிப்படையில் இது சாப்ட்வேர், ஹார்வடுவேர் தொடர்பான படிப்பு.
அனைத்து சேவைகளிலும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பம் வளா்ந்து வருகிறது. உதாரணமாக நாம் பயன்படுத்தும் அறிதிறன் கைப்பேசியே இந்த தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறது. இதில் பல்வேறு விதமான சென்சார்கள் உள்ளன. அதன்மூலம் உங்களின் அனைத்து ரகசியங்களும் இணையதளத்தில் உலா வருகின்றன. இதன் மூலம் அதிகரிக்கும் இணைய குற்றங்களை தடுப்பதற்காக சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். இந்தியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவங்கள் இயங்குகின்றன. இவை தவிர, உள்நாட்டு நிறுவனங்கள் ஏரளமாக உள்ளன. எனவே, எந்த சூழலிலும் வேலை வாய்ப்புக்கு இந்த படிப்புக்கு குறைவு இருக்காது. பொறியியல் படிப்பை படித்து வேலையில் சேரும் இளைஞர்கள் 2 ஆண்டு சைபர் செக்யூரிட்டி படிப்பை கூடுதலாக படிக்கலாம். மேலும் பல்வேறு இணைய நிறுவனங்கள் பட்டய படிப்புகளை பிரத்யேகமாக வழங்குகின்றன.
சைபர் செக்யூரிட்டி படிப்புகளில், குற்ற தடயங்கள், சைபர் லா அண்ட் எத்திக்ஸ், குற்றங்களை கண்டறியும் உத்திகள், பாதுகாப்பு குறியீடுகள், புட் பிரிண்டிங் கோடு இஞ்சக்ஷன், கிராஸ் சைட் பிரின்டிங் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. மேலும் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்துதல், இன்டர்நெட் பயன்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை கற்றுத்தரப்படும்.
இப்படிப்பை வழங்கும் கல்லூரிகள்
1.தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட், தில்லி 2. என்ஐஇஎல்ஐடி ஸ்ரீநகர், 3. இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்லூரி, சென்னை, 4. பிரைன்வார் யுனிவா்சிட்டி கொல்கத்தா, 5. அமிட்டி பல்கலைக்கழகம் , ஜெய்ப்பூர், 6.எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, சென்னை 7.தேசிய தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை இன்ஸ்டிடியூட், ஹதராபாத், 8. சாரதா பல்கலைக்கழகம் நொய்டா உள்ளிட்ட 15க்கும் மேலான கல்வி நிறுவனங்கள்
குவிந்திருக்கும் வேலை வாய்ப்புகள்
கணினி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்தே கொண்டேயிருப்பதால், சைபர் செக்யூரிட்டி படித்த 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் தேவை உள்ளது. நல்ல ஊதியத்துடன் பெரு நிறுவனங்கள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், ஆய்வகங்கள், ஐ.பி.எம் , மைக்ரோ சாப்ட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உலகளாவிய வங்கிகள் அனைத்தும் தங்கள் எலட்க்ரானிக் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திறமை வாய்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்களை பணியில் அமர்த்துகின்றன.
வங்கிகள் மட்டுமின்றி பிற தொழில் துறையினரும் தங்கள் நிறுவனங்களின் தொழில்முறைகள் உள்ளிட்ட பல்வேறு கணினி நிரல்களை இணைய திருட்டிலிருந்து பாதுகாக்க சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் நியமித்து வருகின்றன. பொறியியல் படிப்பை முடித்தவர்கள் , குறிப்பாக கணினி, தொலைதொடர்பு துறைகளில் இளங்கலை முடித்தவர்கள் சைபர் செக்யூரிட்டி சார்ந்த படிப்புகளில் நிபுணத்துவம் பெற்றால் பெரு நிறுவனங்கள் மட்டுமில்லாது, வங்கி, அரசின் பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்பை பெறலாம்.