2018-19ம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள வேதியியல் பாட முதுகலையாசிரியர் காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பெறப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட இட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலம் வரும் 30ம் தேதி நடைபெறும் என பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
- இதுகுறித்து, அவர் வழங்கிய சில அறிவுறுத்தல்கள்:
- முதன்மை கல்வி அதிகாரிகள் பட்டியலில் உள்ள தேர்வர்கள் தங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும், இதுகுறித்து அவர்களுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.
- தேர்வர்கள் தங்களுடைய நுழைவு சீட்டு, அசல் கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் தவறாமல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
- அலுவலர்கள் சான்றிதழ் சரிபார்த்த பின்னரே, அவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
- தனியர் ஒரே ஆண்டில் இருவேறு பட்டங்கள், இரட்டை பட்டங்கள் பெற்றிருத்தல் கூடாது.
- கல்விதகுதிகள் சான்றிதழ் சரிபார்த்த பின்னரே, பணி நியமன ஆணை வழங்க வேண்டும். தவறும் ஏற்படும்பட்சத்தில், அலுவலரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
- தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ள தேர்வர் எவரேனும் கலந்தாய்வு நடைபெறும் விவரம் தனக்கு தெரிவிக்கப்படவில்லை எனப்புகார் தெரிவித்தால், அதுதொடர்பாக, சம்மந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.