தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,
தமிழகத்தில் தற்சமயம் கொரோனா இரண்டாம் அலை வீசி வருவதால், அரசு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளதால், தற்போது உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருவதாலும், மேலும் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாலும் ஆணையம் சார்பில் பாிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் விவரம்,
- அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி விடப்பட்டு கண்டிப்பாக குழந்தைகளை அமர வைக்க வேண்டும், அதிக எண்ணிக்கை இருந்தால், அதற்கான சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- அனைத்து குழந்தைகளும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- கை சுத்திகரிப்பான் ஒவ்வொரு வகுப்பு அறையிலும் வைத்திருக்க வேண்டும், குழந்தைகளை கைகளை சுத்தமாக வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி வகுப்பறை நுழையும்போது, வௌியேறும்போது சமூக இடைவெளியுடன் செல்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- அதேபோல், விளையாட்டு திடலிலும் குழந்தைகள் தக்க பாதுகாப்புடன் விளையாட உடற்கல்வி ஆசிரியர்கள் உடன் இருந்து அதை கண்காணித்து பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி வாகனங்களில் கை சுத்திகரிப்பான் வைத்திருக்க வேண்டும், ஓட்டுநர் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
- மதிய உணவின்ேபாது, கூடி அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, தனித்தனியாக அமர வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால், அதற்கு ஏற்றவாறு, அதன் நேர அட்டவணை மாற்ற வேண்டும்.
- தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அவசர கால தொலைபேசி எண்ணை அடங்கிய பதாகைகளை பள்ளியில் தொங்கவிட வேண்டும்.
குறிப்பாக ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவது மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும். இந்த நடைமுறைகளை பள்ளியில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.