திருவண்ணாமலை போளூர் அருகே உள்ள அரசு பள்ளியில் சத்துணவு முட்டை கேட்ட மாணவரை பணியாளர்கள் இருவர்கள் துடைப்பத்தால் தாக்கும் வீடியோ காட்சிகள் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சமையலர், உதவியாளர் இருவரை இடைநீக்கம் செய்தும், 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டை வழங்கப்படாமல் அதை சத்துணவு ஊழியர்கள் வெளியில் விற்பனை செய்து வருகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை அருகே செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று சத்துணவு வழங்கியபோது முட்டை கேட்ட மாணவரிடம் முட்டை இல்லை என்ற ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் முட்டை இருப்பது தெரியவந்ததையடுத்து, அதுகுறித்து அந்த மாணவர் கேள்வி எழுப்பிய நிலையில், மாணவரை துடைப்பத்தால் அடித்துள்ளனர். அவர்கள் மாணவர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.