அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடு ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, 1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டது. பொதுத்தேர்வுகள் (முறையற்ற செயல்பாடுகளை தடுத்தல்) மசோதா, 2024 மீதான விவாதத்தின்போது பதிலளித்து மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது, இளைய சமுதாயத்தின் சக்தி நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நபர்களை தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.திட்டமிட்ட குற்றங்கள் செய்பவர்களுக்காக சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை தியாகம் செய்ய முடியாது. வேலைதேடும இளைஞர்களும் நேர்மையாக தேர்வெழுதும் மாணவர்களும் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். அவை உறுப்பினர்களின் ஒருமித்த குரலில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை நாம் இன்று தொடங்கி வைத்துள்ளோம், என்றார். கணினி வழியிலான தேர்வுகளை மிகவும் பாதுகாப்பாக நடத்துவது தொடர்பான பரிந்துரைகள் அளிப்பதற்காக தேசிய அளவிலான உயர்நிலைக்குழு ஒன்றை அமைக்கவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.