கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 8 மாணவர்கள் மதுபானம் வாங்க பணம் தரவில்லை எனக்கூறி, ஜூனியர் மாணவர் ஒருவருக்கு மொட்டையடித்து தூக்கியடித்ததுடன், விடுதி அறையில் பூட்டி வைத்து ராகிங் செய்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராகிங் செய்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 8 மாணவர்களும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்குள் சமசரம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தந்தையும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை. இதையடுத்து 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்கு செல்ல வேண்டிய நோக்கம் என்ன, இதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது. ஒழுக்காமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை. பள்ளியில் படித்த திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றாவிட்டால் அதை படித்து என்ன பயன், படிக்க வைப்பதற்காக பெற்றோர் படும் கஷ்டத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனிதத் தன்மையற்ற ராகிங் செயலால் மற்றவரைத் துன்புறுத்துவதன் மூலம் இன்பமடைவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர். மாணவர் பருவத்தில் இளைய சமுதாயதத்தினர் ரசித்து வாழ வேண்டுமே, தவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அந்த மாணவர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.