பத்தாம் வகுப்பு பொது தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியையகள் 25 கி.மீக்கும் அதிகமான தொலைவில் பணியமர்த்தப்பட்டு, அலைகழிக்கப்படுவதாக அதிருப்தி எழுந்துள்ளது.
தமிழகத்தில் மேல்நிலை தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 28ம் தேதி துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் 518 பள்ளிகளை சேர்ந்த 40,061 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 158 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது, பத்தாம் வகுப்பு பொது தேர்வு பணியில் ஈடுபட்ட 4,217 பேரில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள். இப்பணிக்கு வடவள்ளியில் இருந்து பீடம்பள்ளியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு, 27 கி.மீ பயணித்து, ஆசிரியை ஒருவர் சென்று வருகிறார். அதேபோல் சிங்காநல்லூரை சேர்ந்த ஆசிரியை ஒருவர், வடவள்ளிக்கு பணியமர்த்தப்பட்டதால், தினமும் வாகனங்களில் அடித்து, பிடித்து செல்ல வேண்டியுள்ளது. முன்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் 15 கி.மீ தூரத்திற்குள் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். கோவையில் மட்டும்தான், தொலைதூரத்துக்கு பணியமர்த்தப்படும் அவலம் உள்ளது. காலை 10 மணி தேர்வுக்கு வாகனங்களில் உயிரை கையில் பிடித்து செல்கிறோம். நாளை ஆங்கிலத் தேர்வு நடக்கிறது. அதற்குள் அலைச்சலை தவிர்க்கும் விதமாக, அருகே இருக்கும் மையங்களுக்கு ஆசிரியர்களை பணியமா்த்தினால் சிரமமின்றி இருக்கும். மாவட்ட கல்வி அதிகாரிகள் தீர்வு காண வேண்டும், என்றனர்.