கோவை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. கொரோனா காலத்தில் இருந்தே உத்தரவு மீறி மாணவர் சேர்க்கை நடத்துவதாகவும், பெற்றோரிடம் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. கல்வி அதிகாரிகளும் பெயரளவில் பள்ளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுற்றறிக்கை மட்டும் அனுப்பிக்கொண்டிருந்தனர். மேலும் கள ஆய்வு செய்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கம்போல், தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தங்களுக்கே உரிய பாணியில் கட்டண வசூலில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து புகார்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தன. இதனை தொடர்ந்து ஆட்சியர் ராஜாமணி அவர்கள் அனைத்து வகை கல்வி அலுவலர்களை அழைத்து தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர் சேர்கை, பெற்றோர் மற்றும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது, கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட அரசு உத்தரவுக்கு எதிராக செயல்படும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.