கோவை பிரபல தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 1 மாணவி, ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்த கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தை உலுக்கியுள்ளது.
கோவை உக்கடத்தை சேர்ந்த ஒருவர் பேக்கரியில் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மூத்த மகள் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டு, வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். அப்போது, அந்த பள்ளியில் பணியாற்றி வந்த உடற்கல்வி ஆசிரியர், ராட்சசன் பட பாணியில், யாரும் இல்லாத நேரத்தில் கலையரங்கிற்கு அழைத்து மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி, வெளியே கூறினால், அசிங்கம் என நினைத்து தன்னுள் மறைத்து நாள்தோறும் நரக வேதனை அடைந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை, பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் எடுத்து செல்லப்பட்ட போதிலும், மாறாக, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த மாணவியை மறைமுகமாக மிரட்டியதாக கூறப்படுகிறது. உளவியல் ரீதியாக பாதிக்கபட்ட மாணவி, பள்ளியிலிருந்து விலகி, வேறு ஒரு பள்ளிக்கு மாற்றம் பெற்றார். கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி, நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி தாளாளர், முதல்வர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மாணவி தனது கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர். தனக்கு பாதிப்பு ஏற்படுத்திய ஆசிரியரை சும்மா விடக்கூடாது என எழுதியுள்ளார். மாணவியின் மரணம் செய்தியை அறிந்த சக மாணவர்கள், பெற்றோர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும், மாதா் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் மாணவிக்கு நீதி பெற்றுதர கோரியும், சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை கோரியும் போராட்டம் நடத்தி நடத்தினர் மாணவியின் பெயர், அவரது குடும்பத்தின் விவரங்களை காப்பது எங்களது கடமை. போக்ஸோ சட்டத்தின் படி, பள்ளியின் பெயர், குற்றவாளி பெயர் வெளியிடக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு, பெயர் வெளியிடாமல், இந்த தகவல் பதிவு செய்யப்படுகிறது.