Coimbatore latest education news | பள்ளி தொட்டியில் விழுந்து மாணவன் பலி
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள நாகராஜபுரத்தில் அன்னை சத்யா நகர் தொடக்கப்பள்ளி உள்ளது. தற்போது அந்த பள்ளியில் சுற்றுசுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
அதே பகுதியில் கார்த்திக் தம்பதியினர் வசித்து வருகிறார். இவரது மகன் குகன்ராஜ் அங்குள்ள தனியார் உதவிபெறும் பள்ளயில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் விளையாடுவதற்காக கடந்த 6ம் தேதி மாலை துவக்கப்பள்ளியில் சென்ற சிறுவன் அங்கிருந்த 6 அடி ஆழம், 4 அடி தண்ணீர் உள்ள தரைத்தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.
பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் இவர் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுவனை காணாததால், பெற்றோர் தேடியபோது இரவு தொட்டியில் கிடந்த சிறுவனை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுவனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மாணவனை கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் கட்டிட வேலை செய்துவரும் அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சரிவர மூடாததால் தான் சிறுவன் விழுந்து இறந்ததாக கூறி சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.