பிளஸ் 2 பொதுத்தேர்வில் மே 3 மற்றும் 4ம் தேதி நடைபெறும் தேர்வுகளை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக அரசு பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தேர்வை வரும் 3ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது. ஒது ஒரு சில இடங்களில் 3ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் 3ம் தேதி முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவும். மாணவர்களும், ஆசிரியர்களும் சீரான மன நிலையில் தேர்வு சந்திக்க முடியாது. எனவே அன்றைய தினம் போக்குவரத்து இடர்பாடுகளையும் மாணவர்கள் சந்திக்க நேரிடும். ஆகவே, தேர்வுக்கான கால அட்டவணையை மாற்ற வேண்டும் அல்லது மே 3 மற்றும் 4ம் தேதி நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை கடைசியாக நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பள்ளி கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.