அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த மாதம் மரங்களின் கனவு எனும் தமிழ் மொழிபெயர்ப்பு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியரை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு திரையிடும் முன்பு அவர் அந்த படத்தை பார்க்க வேண்டும். பிறகு கதை சுருக்கத்தை படித்து, படத்தின் அடிப்படை பின்னணியை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி, மாணவர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.