Read Also: இந்தியாவில் 22 கோடி குழந்தைகள் பாதிப்பு
பள்ளியில் பரீட்சைக்குத் தயாராவதற்காகப் படிப்பதும், பொழுதுபோக்கு அம்சமாகத் தொடங்கிப் பிறகு இலட்சியமாக விரிவடையும் வாசிப்பும் எப்போதுமே ஒன்றாக முடியாது. வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்கள் மிக அற்புதமான வாசிப்புப் பழக்கமுடையவர்கள் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லும் நேரமிது. "புத்தக வாசிப்பைவிட வலுவான அறிவார்ந்த குழந்தைப் பருவம் வேறு இல்லை. நூலகத்தைவிட சிறந்த குழந்தை வளர்ப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை" - பேராசிரியர் யஷ்பால். குழந்தைகள் உலகம் புத்தகத்தைப் போல தனக்குள் புதையல்களைக் கொண்டது. கார்ட்டூனில் விரியும் வானம், பரபரப்பு இல்லாத கவித்துவம் பூக்கும் நட்பு வட்டம், பட்டமாய் மிதக்கும் கனவு ராஜ்யம், அந்தச் சிரிப்பில் எத்தனை திறமைகள், சண்டை, சமாதானம் அனைத்தும் ஒரு புன்னகை வீச்சில்.... அவர்களை முத்தமிடத் துடிக்கிறீர்களா ? அள்ளிக் கொஞ்சிடத் தவிக்கிறீர்களா ? முத்தான புத்தகப் பூங்கொத்தால் முத்தமிடுங்கள் ! அற்புத அறிவு நூல்களால் அள்ளிக் கொஞ்சுங்கள். நல்ல கதைசொல்லிகளாய் மாறுவோம், வாசித்துக் கதை சொல்வோம். குழந்தைகள் தின வாழ்த்துகள்.