You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
Child Labour Abolition Day in Tamil குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கட்டுரை
Child Labour Abolition Day in Tamil குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கட்டுரை
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் ஏன் பின்பற்றப்படுகிறது?
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் நாள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறோம். பள்ளிக்கு செல்லும் வயதிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது இன்றளவும் குற்றமாக உள்ளது. உலகில் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றும், அதில் 9 கோடி குழந்தை தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளை செய்து வருவதாக யுனிசெப் (UNICEF) நிறுவனம் மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறு வயதிலே பணிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மனநலத்திலும் பிரச்னைகள் வருவதாகவும் விரைவில் மது, புகை, புகையிலை போடுதல் போன்ற தீய பழக்க வழக்கத்திற்கு ஆளாகின்றனர் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் நிலை என்ன?
நமது நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல், பேக்கரி கடைகள், உணவகங்கள் ,பெட்ரோல் பங்க், சாலையோர தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றில் வேலை பார்க்கின்றனர். துணிக்கடை போன்ற நிறுவனங்களில் இன்றும் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகள் பலர் வேலை செய்துவருகின்றனர். 12 முதல் 14 மணி நேரம் வரை தொடர்ந்து நின்றால், அது பிற்காலத்தில் அவர்களின் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நலனுக்காக மட்டும் ஏராளமான அரசு அலுவலர்கள் மக்களின் வரிப்பணத்தின் மூலம் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் முறையாகச் செயல்படுவதில்லை. அதேபோல், குழந்தைகளின் நலனை மேம்படுத்த, தொழிலாளர்கள் துறையும் ,கல்வி துறையும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இணைந்து செயல்படுவதில்லை. கிராம அளவில் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கிற கமிட்டிகளை உருவாக்க வேண்டும் என்று 2001-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அரசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி, அதற்கான நிதியையும் ஒதுக்கியது. ஆனால், அந்தத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை.
Also Read: குழந்தைகள் வளரிளம் பருவம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?
குழந்தை தொழிலாளரும் கொரோனா தாக்கமும்
கொரானா பெருந்தொற்று என்பது வெறும் மருத்துவம் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே அணுகப்படுகிறது. இந்நோய் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியது. அப்படி காலந்தோறும் நீடித்துவரும் சமூகப் பிரச்சினையான குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த கொரானா காலத்தையொட்டி அதிகரித்து இருக்கிறது. வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட்டு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகள் ஏராளம். இதேபோல் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வரும் சிறுவர்கள், நகரங்களில் உள்ள உணவகங்கள், கடைகள், வீடுகள் என வேலை பார்க்கும் நிலை உள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாகி உள்ளது என்பதே கள உண்மை. இதை கல்வித்துறை கவலையோடு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். பின்னர் 2020ஆம் ஆண்டு யுனிசெஃப் ஆய்வு அறிக்கையின்படி இந்த எண்ணிக்கை ஒரு கோடியே முப்பது லட்சத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. யுனிசெப் (UNICEF) நிறுவனம் மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) ஆய்வுப்படி இக்கொடுந்தொற்று காலம் அடுத்த ஆண்டிற்குள் (2022 க்குள்) உலக அளவில் மேலும் நான்கில் இருந்து ஐந்து கோடி குழந்தைகளை கூலி உழைப்பாராக மாற்றும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. குழந்தைகள் தொழிலாளர்களாகத் தள்ளப்படுவதற்கு அவர்களின் வறுமையான பொருளாதார நிலையே காரணம், அதற்கான நிர்பந்தத்தை உருவாக்குகிறது.
இந்நிலையில் இந்தக் கொரானா காலம் கடுமையான வேலையின்மையை உருவாக்கியுள்ளது. பொருளாதாரம் மேலும் சரிந்துவரும் நிலையில் சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள மக்களுடைய வீட்டின் பொருளாதாரமும் கடுமையாகச் சரிவை சந்தித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அன்றாடம் உணவுத் தேவைக்காவது குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலையை இச்சூழல் உருவாக்கியுள்ளது. பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இவர்களுக்குப் பள்ளியில் கிடைத்துவந்த சத்துணவு இப்போது இல்லை. இவர்களின் பெற்றோர்களுக்கும் வேலை பறிபோயுள்ளது அல்லது சம்பளம் குறைந்துள்ளது. இப்படியான மோசமான வாழ்நிலையை எதிர்கொள்ள குழந்தைகள் தங்களின் உழைப்பைச் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி குழந்தைகளின் இடைநிற்றல் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கல்லூரி மாணவ, மாணவிகள் 60 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு வேலைக்கு செல்லும் சூழ்நிலையை இக்கொடுந்தொற்று காலம் உருவாக்கி உள்ளது .இதன் காரணமாக கல்வியின் மீது இருந்த அக்கறை மேலும் குறைந்துள்ளது என்பதை கல்லூரி பேராசிரியர் என்ற அடிப்படையில் கண்கூடாக பார்க்கிறேன். இவ்வாறு ஏழை மக்களின் குறைந்தபட்ச நிலையான வாழ்வையும் இந்தக் கொரானா சிதைத்துவிட்டது. இப்படியான சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் குறித்து அரசுக்கு ஒரு பார்வையில்லாமல் போனால் இக்கொரானா காலத்திற்குப் பிறகு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரவே செய்யும் என்பதை மறுக்கமுடியாது.
சாதாரண காலத்திலேயே குழந்தைத் தொழிலாளர்களை வேலை தளங்களிலிருந்து மீட்டு அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். அதற்காக மட்டுமே அரசு சிறிதளவு பணம் ஒதுக்கும் வேலையைச் செய்யும். மீட்கப்பட்ட குழந்தை ஒருவருக்கு இவ்வளவு என்ற ஒதுக்கீட்டின்படி அக்குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை நடத்துவதும் அதில் அவர்களைப் பயிற்றுவித்து பொதுப் பள்ளிக்கு மாற்றுவதையும் தொண்டு நிறுவனங்கள் ( NGO) மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
இதில் பல்வேறு போதாமைகள் இருப்பதைக் கள எதார்த்தத்தில் அறிகிறோம். அரசின் நிதி ஒதுக்கீடும் அதன் மூலம் நடத்தப்படும் இந்தச் சிறப்புப் பள்ளிகளும் குழந்தைத்தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களை மையப்படுத்தப்பட்டவையே. உண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகும் நிலையை மாற்றுவதாகும். ஆனால், அதற்கான திட்டமிடல்கள் அவசியமான ஒன்றாகும்.
கட்டாய கல்வி
இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்கிற சட்டத்தை கடுமையாக நிறைவேற்றினால்தான் அதிகளவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாகவே வேலைக்கு செல்கின்றனர். பெற்றோரின் நிரந்தர வருமானத்துக்கான வேலைவாய்ப்பை, சமூகப்பாதுகாப்புடன் கூடிய பணிச்சூழலை அரசு உருவாக்கினால் மட்டுமே அவர்களே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கல்விக்கான நிதியைக் கூடுதலாக ஒதுக்கி, அனைவருக்குமான இலவச கட்டாயக் கல்வியை உளப்பூர்வமான வகையில் வழங்குவதை அரசு உத்தரவாதப்படுத்தினால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கமுடியும். குழந்தைகளின் முழு நேர வேலை பள்ளிக்கு செல்வதும், படிப்பதும் தானே வேலைக்கு செல்வதல்ல. பள்ளி விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டிய குழந்தைகள் செங்கல், சுண்ணாம்பு சூளைகளிலும், சுரங்கங்களிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் பஞ்சு ஆலைகளிலும் வேலை செய்து கொண்டிருப்பது வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். அனைவரும் கரம் கோர்த்து இந்த பேரவலத்தை முடிவுக்கு கொண்டுவர பாடுபட வேண்டும்.