தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய "பெற்றோர்களை கொண்டாடுவோம்" கோவை மண்டல மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடந்தது.
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். இதில் அவர் பேசியதாவது, முதல் மாநில மாநாடு மதுரையில் துவங்கப்பட்டது. மாநில வளர்ச்சிக்கு கல்வி தான் முக்கியம் என 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என கூறி அதற்கான முன்னேற்பாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றது. மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. 33 மாவட்டங்களில், 128 முறை ஆய்வு செய்தேன் என்ற முறையில் கூறுகின்றேன். மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் பார்க்க வேண்டும். தற்போது மனநிலை மாற்றங்கள் அதிகமாகி உள்ளது. செல்போன்களால், மனநிலை பாதிக்கப்பட்டு பிள்ளைகள் பெற்றோர்களை மிரட்டுகின்றனர். ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்களாகவும், பெற்றோர்கள் இரண்டாம் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும், அவர்களது நடவடிக்கைகளை பார்க்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. ஆசிரியர்கள் தன் பிள்ளைகளை விட தான் பயிற்றுவிக்கும் பள்ளி குழந்தைகளையே அதிக கவனம் செலுத்தி பார்க்கின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் தனிப்பட்ட திறமைகள் உள்ளது. அதை நாம் கண்டறிய வேண்டும்.கல்வியின் முக்கியத்துவத்தை பி்ள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள், எவ்வளவு சிபாரிசு இருந்தாலும், நமக்கு தகுதி என்பது கல்வியே அதை எடுத்து கூற வேண்டும்.பின்னர், ஈரோடு மகேஷ் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளுக்கு வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களது பெற்றோரின் வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ஏற்ப்பாடு செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்படுத்தி தரப்படும், என்றார்.