CEO Office Coimbatore | கோமா நிலையில் கோவை முதன்மை கல்வி அலுவலகம்
CEO Office Coimbatore
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொலைபேசி சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதன்மை கல்வி அலுவலர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கல்வி அலுவலகங்களை பிரித்தாலும், பிரத்யேக அலுவலகம் இல்லாமல், பல மாவட்டங்களில் அரசுப்பள்ளி வளாகத்திற்குள் உள்ள காலி கட்டங்களே, நிர்வாக பணிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அலுவலகங்களை மக்கள் தொடர்பு கொள்ள பிரத்யேக தொலைபேசி எண்கள் உள்ளன. ஆனால், சேவை கட்டணம் செலுத்தாமல் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், பல மாதங்களாக தொடர்புக்கு அப்பால் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியான தகவலில், 86 மாவட்ட கல்வி அலுவலகங்களில் தொலைபேசி இணைப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 22 மாவட்ட கல்வி அலுவலரிடம் மட்டுமே, சியுஜி எண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநிலதலைவர் ராஜ்குமார் கூறும்போது, கல்விசார்ந்த சந்தேகங்கள், கூடுதல் தகவல்களுக்கு, அலுவலகங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கூட இல்லை. அரசு அதிகாரிகள் இடமாறுதல் பெறுவதல்தான் சியுஜி எனும் குறிப்பிட்ட பதவிகளுக்கு, நிரந்தர தொடர்பு எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 22 டிஇஒக்கள் தவிர, மற்றவர்கள் அவர்களது சொந்த எண்கள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
பொதுமக்கள்ளோ அல்லது சமூக ஆர்வலர்களோ நேரில் சென்றுதான் அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. கட்டண பாக்கி, செலுத்தி, தொடர்பு எண் சேவையை மீண்டும் பெற வழிவகை செய்ய வேண்டும், என்றார்.
இதற்கிடையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், அலுவலகத்திற்கான இரண்டு தொலைபேசி (லேண்ட்லைன்) சேவை கடந்த மூன்று ஆண்டு மேலாக முடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சரி செய்வதற்கான எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பயன்படுத்தும் சியுஜி எண்களுக்கு அழைத்தாலும், அவர் அழைப்பை ஏற்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கோமா நிலையில் உள்ள முதன்மை கல்வி அலுவலக தொலைபேசி சேவையை பாலமுரளி சரி செய்வாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.