மத்திய அரசு வழங்கிய ரூ 1000 கோடிக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தி, ஏழை, எளிய மாணவர்களின் கணினி கல்வியை தமிழக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவா்களிடம் கணினித் திறனை மேம்படுத்தும் விதமாக உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ஹைடெக் லேப் அமைக்கப்படுகிறது). இதற்கு மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ‘இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி (ஐசிடி) நிதியை பெற்று 8,209 நடுநிலை, 6454 உயர்நிலை, மேல்நிலை என 14,663 பள்ளிகளில் இந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது. ஒரு ஆய்வகத்திற்கு ரூ.6.40 லட்சமும், கணினி பயிற்றுநர் நியமிக்க பள்ளிக்கு ஆண்டுக்கு மதிப்பூதியமாக ரூ.1.80 லட்சம், மின் கட்டணம், ,இணைய கட்டணம் போன்ற பணிகளுக்கு ரூ 60 ஆயிரம் என ஒவ்வொரு ஆண்டும் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதியாக வழங்கப்படுகிறது. இதற்கென, தனியே பாடத்திட்டம், கணினி பயிற்றுநர்கள், செய்முறை தேர்வு என்பன உள்ளிட்ட மத்திய அரசின் நடைமுறைகளை மாநில அரசு பின்பற்ற வேண்டும். ஆனால், எதையும் பின்பற்றாமல், மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாாிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் குமரேசன் கூறியதாவது, கணினி அறிவியலுக்கு தனி பாடத்திட்டம் கொண்டு வராமல், அறிவியல் பாடத்திட்டத்தில் வெறுமனே மூன்று பக்கங்கள் இணைத்து பயிற்றுவிக்கின்றனர். இப்படி மத்திய அரசு அளித்த நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை. இதில், கடந்த 2021-2025ஆம் ஆண்டு வரை கணினி பயிற்றுநர்கள் நியமனத்திற்கு ரூ. 434.40 கோடி வழங்கப்பட்டது. 2024-2025ஆம் ஆண்டில் மட்டும் ரூ 439.60 கோடியை கணினி கல்விக்கு மத்திய அரசு வழங்கியது.தமிழக அரசே எடுத்து ஐசிடி நிதி சார்ந்த பணிகளை நடத்த வேண்டும். ஆனால், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், டேப் உள்ளிட்டவற்றுக்கு, கேரள அரசை சோந்த நிறுவனத்திற்கு ரூ.1076 கோடிக்கு இந்த அரசு பணி ஆணை வழங்கியுள்ளது.கடந்த 2008ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கணினி பயிற்றுநர்கள் நியமிக்கும்போது, கணினி அறிவியல் பி.எட் படித்தவர்களை நியமிக்க வேண்டும். நிதியை கணக்கு காட்டுவதற்காக ஆய்வக உதவியாளர்களையும், ஆய்வகத்தில் பணிபுரிய கட்டாயப்படுத்துகின்றனர். இப்பாடத்தில் பி.எட் பயின்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும்போது, அவர்களை நியமிக்காதது தகுதி இல்லாத இல்லம் தேடி தன்னார்வலர்களை நியமித்துள்ளதால், மாணவர்கள் தரமான கல்வி கிடைக்காது பின்தங்குகின்றனர். நிதியும் தவறாக பயன்படுத்தப்படுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.