பள்ளி கல்வித்துறை நடத்திய ஆசிரியர் பயிற்றுநர் பூஜ்ய கலந்தாய்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும், சிலருக்கு இது சாதகமாகவும் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சில ஆசிரியர் பயிற்றுநர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில முக்கியமான தகவல்களாவது -
புதிதாக பொறுப்பு ஏற்ற திமுக அரசு மீது உள்ள நம்பிக்கையில் கல்வித்துறை நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக நியமிக்கப்பட்டு, ஆணையராக நந்தகுமார் நியமிக்கப்பட்டது கண்டு மனம் மகிழ்ந்தோம்.
நீண்ட காலமாக பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பில் கோரிக்கை வைத்திருந்தோம், வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இதற்கிடையில், பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ய கலந்தாய்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதாவது, மாநிலத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களையும், காலி பணியிடமாக கருதிய பின்னர், சீனியார்ட்டி அடிப்படையில் கலந்தாய்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. பூஜ்ய கலந்தாய்வு அறிவித்தபோது, பெரும்பாலான ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள மாவட்ட, ஒன்றிய அளவிலான நடைமுறைப்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும், பூஜ்ய கலந்தாய்வில் பலரும் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.
கல்வித்துறை உயரதிகாரிகள் வழக்கம்போல் அமைதி காத்தனர். அதுமட்டுமா, ஆசிரியர் பயிற்றுநர்கள் சீனியார்ட்டி பட்டியல் பல குளறுபடியுடன் தயாரிக்கப்பட்டது. இது உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதா? அல்லது ஒரு சிலர் பயன் பெறுவதற்காக இது தயாரிக்கப்பட்டதா ? என்பதே அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
அடுத்ததாக, ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களை அவர்கள், முதன் முதலில் பணியில் சேர்ந்த நாளினை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஆசிரியர் தோ்வாணைய அறிவிப்பில் வெளியிடப்பட்ட தரவரிசை எண்ணை கணக்கீடு செய்து, சீனியாா்ட்டி பட்டியலில் வெளியிட்டு, அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இந்த குளறுபடியால், சீனியா் ஆசிரியர் பயிற்றுநர்களை, கலந்தாய்வு பட்டியல் வரிசையில் இருந்து பின்னோக்கி இழுத்து சென்றது.
பள்ளி கல்வித்துறை அரசாணை எண் 134ல் பணி மூப்பு சீனியார்ட்டி அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்துவிட்டு, கலந்தாய்வு பட்டியலை டிஆர்பி தரவரிசையில் அடிப்படையில் வெளியிட்டது முரண்பாடாகும்.
முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தம் ஏதும் இல்லை என்று கடிதம் பெற்ற பிறகு கலந்தாய்வு தொடங்கிய நிலையில், சிலரது தரவரிசை பட்டியலில் மாற்றம் நடந்துள்ளது. இதுதவிர இருந்த பணியிடங்கள் மட்டுமின்றி, பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
மேலும் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஒரே விதமான பயிற்சி, பணிகள் தான் நடைபெறுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை, ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கை. எந்த அடிப்படையில் பாடவாரியாக ஆசிரியர் பயிற்றுநர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.
ஒரு பொதுவான வழிகாட்டுதல் இருக்க வேண்டுமா இல்லையா? ஒத்தையா ரெட்டையா போடுவது எப்படி சரியாக இருக்க முடியும்?.
Spouse முன்னுரிமை என்பது அவரவர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் அந்த காரணத்தினால் முன்னுரிமை பெற்றவர்கள் அடுத்த மாவட்டங்களில் உள்ள இடங்களை தேர்வு செய்தது, அந்தந்த மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவர்களின் வாய்ப்பை பறிப்பதாக அமைந்து விட்டது.
மாவட்டங்களுக்குள் நடந்த பணி நிரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சொந்த மாவட்டத்திற்கு மீண்டும் வருவதற்காக deployment முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை. எப்படி எனில், உபரி பணியிடங்களை மாவட்ட அளவில் நடத்துவிட்டு, ஆசிரியர் பயிற்றுநர்களின் கலந்தாய்வை மாநில அளவில் நடத்தியது, ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
மாநில அளவிலான பூஜ்ய கலந்தாய்வு என்று அறிவித்த பிறகு முன்னுரிமை அளித்தது எப்படி சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அந்த முன்னுரிமை பட்டியலும் கூட எந்த ஆண்டில் பணியேற்றார் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக வைத்து முன்னுரிமை பட்டியல் தயாரித்தது என்பது, என்ன வித அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்றும் தெரியவில்லை.
2002, 2005, 2010, 2014 என்று எல்லோரையும் ஒரே பட்டியலில் வைத்து அதில் முன்னுரிமை என்றால் 5 வருடம், 10 வருடம், 15 வருடம் என பணியாற்றிவரும் அரசு ஊழியரின் பணி மூப்புக்கு என்ன மரியாதை, என்ன அர்த்தம் உள்ளது என்று தெரியவில்லை.
2007ல் பணி ஏற்றவர் சொந்த மாவட்டத்தில் தன்னுடைய பணி இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரை விட பணியில் இளையோர் அவருடைய வாய்ப்பை பறிக்க முடிகிறது என்றால் இது என்ன வகையான அணுகுமுறை.?
Convertion மற்றும் பணி ஓய்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் தற்போது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதன் மூலமே மாவட்டத்தில் இருந்து வெளியில் சென்றவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கி இருக்க முடியும். அதைச் செய்யவில்லை. இந்த கலந்தாய்வு அந்த நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை.
மீதி உள்ள இடங்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே கலந்தாய்வு வெற்றிகரமாக நடத்தி இருக்க முடியும். அதையும் செய்யவில்லை. பணியில் மூத்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தோர் பல்வேறு மாவட்டங்களுக்கு பந்தாடப்பட்டுள்ளனர்.
சில நூறு பேருக்கு வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாய்வு சில ஆயிரம் பேரை கடும் மன உளைச்சலுக்கும் பரிதவிப்பிற்கும் ஆளாக்கியுள்ளது. குடும்பங்கள், குழந்தைகள், கணவன்/மனைவி என பலரையும் நிம்மதியற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.
காலை எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் தனக்கான பணியிடத்தை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ஒரு ஆசிரியர் பயிற்றுநர் தேர்வு செய்து விட்டு எதற்கு காத்திருக்கிறோம் என்று தெரியாமலேயே பத்து, பனிரெண்டு மணி நேரம் காத்திருந்த கொடுமைகள் ஒருபுறம்.
இது ஒரு புறம் இருக்க, கலந்தாய்வில் அவருக்கான இடம் பறிபோனதால், மன உளைச்சலோடு கலந்தாய்வில் நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தை சேர்ந்த கணித ஆசிரியர் பயி்ற்றுநர் திரு சின்னதங்கம் என்பவர் மாராடைப்பால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது ஆசிரியர் பயிற்றுநர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர, பெரும்பான்மையான மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களே மீண்டும் அவர் பணிபுரிந்த பணியிடத்தையே தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மீண்டும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றும் வழிவகையை ஏற்படுத்தி உள்ளது.
நிர்வாகம் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கலந்தாய்வில், மீண்டும் அதே பணியிடத்திற்கு வாய்ப்பு வழங்கியிருப்பது நிா்வாக குளறுபடியே, இதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.
பாட வாரியாக, மாவட்ட தோறும் பணியிடங்கள் வழங்கப்படாமல், கல்வித்துறை நிர்வாகம் விரும்பியவாறு, பணியிடங்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஒதுக்கீடு செய்து, முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என எண்ணுகிறோம். பாடவாரியான சமநிலையும் முற்றிலும் கடைப்பிடிக்கவில்லை.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிந்து, புதிய இடங்களில் பணியமா்த்தப்பட்டவர்கள் மீண்டும் மாவட்ட அலுவலகத்திற்கு, மாற்று பணியில் செல்வதற்கான அனைத்து வழிகளையும் கையாண்டு, அதே பணியிடத்திற்கு செல்வதற்கான செயல்பாடுகளை முழு வீச்சில் செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு, வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து, பணி மாறுதல் பூஜ்ய கலந்தாய்வில் வந்தவர்களையும், சில முதன்மை கல்வி அலுவலர்கள் நேரடியாக மிரட்டுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரைவில் இவை அனைத்தும் ஆதாரத்துடன் அனைத்தையும் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்துகளை மறக்காமல் கீழே உள்ள Comment Box ல் பதிவு செய்யுங்கள், அதிகாரிகள் அறிந்துகொள்ளட்டும்.