கல்லூரிகள் திறக்கப்பட்டு 40 நாட்களைக் கடந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பழைய பாடத்திட்டங்களை பின்பற்ற அறிவுறுத்தியதால் மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 133 உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. துணைவேந்தர் இல்லாததால், பல்கலைக்கழகம் கடந்த இரண்டு நாட்களாகபல்வேறு நிர்வாக சிக்கல்களை சந்தித்து வருகிறது. துணைவேந்தர் மட்டுமின்றி, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் என முக்கிய பதவிகளுக்கான இடங்கள் பல ஆண்டுகள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடு, நீதிமன்ற வழக்குகள் நிலுவை, தணிக்கை தடை அதிகரிப்பு என அடுக்கடுக்காக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கல்லூரிகள் தொடங்கி 40 நாட்கள் கடந்த நிலையில் செவி வழியாக வந்த செய்தியை வைத்து புதிய பாடத்திட்டங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் பழைய பாடத்திட்டங்களை பின்பற்றுமாறு பல்கலைக்கழகத்திலிருந்து வந்துள்ள உத்தரவு மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர்.