தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 2024-2025ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவா்களது பள்ளிகளிலேயே புதியதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகை சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது, வரும் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கி கணக்குகள் தொடங்கிடும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போது, ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதனால் பெற்றோர், மாணவர்கள் சிரமம் குறையும். மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையினை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் தருணத்திலும் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகை சான்றிதழ்கள் அவசியமாகின்றன. தற்போது இ- சேவை மையம் மூலமாக அவர்கள் பெற்றுவருகின்றனர். மாணவர்கள் படிக்கும் அந்ததந்த பள்ளிகளிலேயே வரும் கல்வியாண்டில் (2024-2025) ஆறாம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளி தலைமையாசிரியடம் சமர்ப்பிக்கும்ேபாது, அதன் விவரங்கள் எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, வருவாய்துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, எமிஸ் தளம் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும்., இவ்வாறு இயக்குனர் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.