அலுவலக பணியாளர் பள்ளிக்குள் வைத்து பூட்டி சென்ற ஹெச்எம் - நடந்தது என்ன?
அலுவலக பணியாளர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. கடந்த திங்களன்று மாலை 6 மணிக்கு பள்ளி வளாகத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஏன் பள்ளி வளாகத்தில் நிற்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, தான் பள்ளியின் கிளார்க்காக பணியாற்றும் செல்வக்கதிர், தலைமை ஆசிரியை உமா, தன்னை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, நான் பள்ளி வேலைகளை மாலை 6:30 வரையிலும் பார்த்துவிட்டுதான் வீட்டிற்கு செல்வேன். இன்று (திங்களன்று) 5.45 மணியளவில் கேட்டை பூட்ட வேண்டும். எனவே வெளியே செல்லுமாறு தலைமை ஆசிரியர் கூறினார். அதற்கு வேலை உள்ளது என்று நான் கூறியபோதும், உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றார். நான் பார்க்கும் பள்ளி அலுவல் வேலைகளை என்னை பார்க்கவிடாமல் மற்றவர்களை வைத்து முடித்து கொள்கிறார்.
இறுதியில் நான் வேலை பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை உருவாக்குகிறார். தற்போது எல்லை மீறி உள்ளேயே வைத்து, பூட்டி விட்டு சென்றார்.
இந்த நிலையில், பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்ட தகவல் அறிந்ததும் தலைமை ஆசிரியை உமா வந்து பள்ளி கேட்டை திறந்துவிட்டார்.
தலைமை ஆசிரியை உமா கூறும்போது, பள்ளி 4.05க்கு முடிந்தாலும் அலுவலக நேரம் 5.45 வரை தான் இருக்க வேண்டும். நான் பெண்ணாக இருக்கும் நிலையில், அதற்கு மேல் எப்படி அங்கு இருக்க முடியும். எனவே வெளியே வாருங்கள், பூட்டிவிட்டு செல்ல வேண்டும் என்றேன், உடனே அவர் வேலை உள்ளது என்று கூறியபடி உள்ள இருந்ததால், நான் வேறென்ன செய்ய முடியும், எனவே பூட்டிவிட்டு சென்றேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதன்மை கல்வி அலுவலர் கீதா என்ன நடவடிக்கை போகிறார் என்று ஆசிரியர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.