சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 25க்கும் மேற்பட்டோர் பரபரப்பு புகார் அளித்தனர். அதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், துணை பேராசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நாங்கள் விண்ணபித்தோம். அப்போது அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் பார்த்தசாரதியின் நட்பு கிடைத்தது.
தற்போது, அவர் குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் துணை பதிவாளராக உள்ளார். இவர் வேலை வாங்கி தருவதாக, எங்கள் 25 பேரிடம் சுமார் ரூ.3.28 கோடி ரூபாய் பணம் வாங்கினார். ஆனால், அவர் எங்களுக்கு பணி நியமன ஆணையை அனுப்பினார். அந்த பணி நியமன ஆணையுடன் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது, போலி பணி நியமன ஆணை என எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என, புகாாில் கூறியிருந்தனர். புகாரின்போரில், விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடந்தது. விசாரணையில், அவர் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ததாக போலியான பணி நியமன ஆணை வழங்கி ரூ.3.28 கோடி பணம் பெற்றது உறுதியானது. அதைதொடர்ந்து, இன்று துணை பதிவாளர் பார்த்தசாரதியை மத்திய குற்றப்பிாிவு போலீசார் கைது செய்து, மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.