பொறியியல் மாணவர்கள், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இரண்டு, மூன்றாமாண்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அந்த தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியதாவது:
- இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 13ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடக்க உள்ளது. அதற்கான மாதிரி ஆன்லைன் தேர்வுகள் ஜனவரி 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் நடக்கும்.
- அதை தொடர்ந்து, மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கும். இந்த தேர்வுகள் ஆன்லைன் முறையின் கீழ் நடத்தப்பட உள்ளன. தினமும் 5 பிரிவுகளாக தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
- காலை 8 மணி முதல் 9 மணி வரையும், காலை 10-11, மதியம் 12-1, 2-3, 4-5 மணி என தலா ஒரு மணி நேரத் தோ்வுகளாக செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதலாம்.
- 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பின்னர் அது 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்படும்.
- மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கியதும், அவர்களின் கணினி இயங்கத் தொடங்கிய நேரத்தில் இருந்து மணி காண்பிக்கும். அப்போது ஒரு மணி நேரத்திற்கான கவுண்ட் டவுன் அதில் தெரியும்.
- ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் கேள்விதாள் வழங்கப்படும். மாணவர்கள் எந்த வழியில் தோ்வு எழுத விரும்புகிறார்களோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
- ஆன்லைன் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் அவர்களுடன் வேறு யாரையும் அமர வைக்க கூடாது. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அவர்கள் படிக்கும் கல்லூரிகளில் அடையாள அட்டை அணிவதுடன், அரசின் அடையாள அட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.