தமிழகத்தில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் அதன் இணையதளத்தில் ஆகஸ்டு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் விண்ணப்ப பதிவு முடிவடைந்தது.
இந்த நிலையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 1,74,930 மாணவர்களுக்கான ரேண்டம் எண் நேற்று தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் 50 உதவி மையங்களில் மாணவர்கள் சான்றிதழ் சாிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரையிலும் நடத்தப்படும். அக்டோபர் 20ம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.