மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலால் தேர்வு பாதிக்கப்படுமா என்ற குழப்பம் எழுந்த நிலையில், இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வு அட்டவணை தேர்தல் ஆணையத்திடம் முன்னதாக கொடுக்கப்பட்டுள்ளது என்றார். எனவே பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தவிர்த்துதான் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை அறிவிக்கும். அதனால், திட்டமிடப்பட்ட தேதிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் எவ்வித இடையூறு இல்லாமல் நடைபெறும். அதில் எவ்வித மாற்றம் இல்லை, என்றார். மேலும் அவர் கூறும்போது, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் 12 கோரிக்கைகள் முன்வைத்தார்கள். இதுதொடர்பாக கடந்த திங்களன்று ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் முதல்வர் மற்றும் நிதித்துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், என்றார்.