பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி
அனைத்து மாணவர்களின் பெற்றோர்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேரடியாக சந்தித்து பேசும் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டமாக நடைபெற உள்ள நிகழ்ச்சியை வரும் 29ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், உயர்கல்வியில் மாதம் ரூ ஆயிரம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தும்விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை பள்ளி கல்வித்துறை நடத்த உள்ளது.முதற்கட்டமாக வரும் 29ம் தேதி மதுரையில் தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலர் குமரகுருபரன், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
மதுரையில் தொடங்கும் இந்த முதற்கட்ட நிகழ்ச்சியில், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.