திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் பெறுவதாக தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது. மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரத்தில் அமைந்துள்ள ஆமணக்கம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஏற்கனவே பெற்றோர் ஆசிரியர் கழகம் கட்டணம் ரூ 50 மட்டுேம மாணவர்களிடம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியையின் உத்தரவில் பேரில், ஆசிரியர்கள் மாணவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் கூடுதலாக ரூ 350 வசூலித்துள்ளது பெற்றோர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்வதால், இந்த கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், பணம் செலுத்தாத மாணவர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த பெற்றோர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், வாக்குவாதம் நடந்துள்ளது. தவெக ஆட்சியில் லஞ்சத்திற்கு இடம் இல்லை என்று முதல்வர் கூறிய நிலையில், இந்த பள்ளியில் மாணவர்களிடம் லஞ்சம் பெறுவது, ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போல் உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற்றோர்களிடமே அளிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.