வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்னர் தபால் வாக்குகள் அளித்துள்ளோம். ஆளும் அரசுக்கு ஆதரவினை விட எதிர்ப்பலையாய் எழுந்திருப்பதைத்தான் சொல்லக் கேட்டு வருகிறோம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அதிமுக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என 20 லட்சம் பேரையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூட நமது எண்ணிக்கையினை சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்களாக உள்ளார்கள்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஏதாவது ஒரு நாள் அறிவிக்க மாட்டார்களா? என்று எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்தோம். மறந்தும்கூட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெயர் உச்சரிக்கப்பட வில்லை.
அதிமுக தேர்தல் அறிக்கையிலாவது எங்காவது ஒரு இடத்தில் நமக்கு இடம் கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஊன்றிப் படித்தால் ஒரு வரி கூட காணப்படவில்லை. வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடிய 8,000 பேருக்கு விதித்திருந்த 17b குற்றச்சாட்டை கூட இரண்டு ஆண்டுகாலம் ரத்து செய்யப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை கொடுத்ததற்குப் பிறகு ரத்து செய்து அறிக்கை விட்டார். அதுவும் போராடாத இரண்டு சங்கங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் ரத்து செய்ததாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். நெஞ்சத்துள் இன்னமும் கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது.
பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி என்ற தனித் தன்மையுடன் செயல்பட்டு வந்த கல்வித்துறையினை சீரமைப்பு என்ற பெயரால் சீரழித்து சின்னா பின்னமாக்கி விட்டார்கள். ஆசிரியர்கள் நியமன வயதினை 40, 45 வயதுக்குள் என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளதால் 80 விழுக்காடு ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பிற்கே செல்ல இயலாத பரிதாப நிலைமையினை ஏற்படுத்தி விட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட் உயர் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வினை ரத்து செய்து விட்டார்கள்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நம்மைப் பற்றி ஏளனமாக வன்மத்துடன் பொது வெளியிலும் சட்டமன்றத்திலும் பேசிய வார்த்தை நெருப்புகள் நமது சினத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்து வருகிறது.
இந்த பாதிப்பான அனுபவத்தினை பெற்றுள்ள ஓர் ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர், அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்ற அரசின் குடும்ப உறுப்பினர்களாவார்கள்.
ஆனால் இவர்களை பகையாளியாகவே எண்ணி பழிவாங்கி வருகிறார்கள். இவர்களால் பேசப்பட்டு வருகின்ற நஞ்சு தோய்ந்த வார்த்தைகளை தொடர்ந்து கேட்டு வருகிற போது தபால் வாக்குகளை அளிப்பதற்கு எவர் தான் முன் வருவார்கள்.
- திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
- புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
- 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 8000 அடிப்படை ஊதியத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் சம வேலைக்கு சம ஊதியம் நிர்ணயம் வழங்கப்படும்.
- அலுவலகங்கள், பள்ளிகளில் உள்ள 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் முழுவதும் தமிழர்களுக்கே நியமன வாய்ப்பு அளிக்கப்படும்.
- அறிஞர் அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட உயர்கல்வி தகுதிக்கான நிறுத்தி வைக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்படும்.
- தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரப் படுத்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
- சீர்திருத்தம் என்ற பெயரால் கல்வித்துறையினை சீர்குலைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்பட்டு மாற்றம் செய்யப்படும்.
- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் 3 லட்சமாக வழங்கப்பட்டு வருகின்ற குடும்பநல நிதி 5 லட்சமாக வழங்கப்படும்.
- மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தி வழங்கப்படும்.
- பெண்களுக்கு நியமனத்தில் 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு இட ஒதுக்கீடு அதிகப்படுத்தி வழங்கப்படும்.
- ஓய்வு பெற்றவர்களுக்கு 70 வயதிலிருந்து 80 வயது வரை 10 விழுக்காடும் 80லிருந்து 10 விழுக்காடும் உயர்த்தி ஓய்வூதியம் வழங்கப்படும்.
- ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் குறைகளை கேட்பதற்கு நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
- மீண்டும் பள்ளிக் கல்வி பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இதனை உறுதிப் படுத்தி உள்ளார்கள்.
- நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்கள் விலக்களிக்கப்பட்டு சட்ட ரீதியான பாதுகாப்புடன் தீர்வு காணப்படும். மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் உருக்கமான வேண்டுகோள்:
தேர்தல் பரப்புரைக்கு தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் செல்லும் இடம் எல்லாம் நமது பாதிப்புகளை நினைவில் சுமந்து கொண்டு வாக்காளர்கள் மத்தியில் நம் இதயத்துக்குள் பொங்கி எழுந்து வருகின்ற கோரிக்கைகள் பற்றி பேசி வருகிறார்.
கலைஞர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பாதுகாவலராக இருந்தார். கலைஞர் மகன் ஸ்டாலினாக உங்களிடத்தில் உறுதி எடுத்துக் கொள்கிறேன். திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என நெஞ்சம் நெகிழும் வண்ணம் பேசிவருகிறார். அந்தக் கூட்டத்தில் கூட உங்கள் வாக்கை எங்களுக்கு அளியுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லை எனற பெருந் தன்மையினை நாம் உணர வேண்டும்.
இயக்கத்தின் அன்புள்ளங்களே! ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என எவராக இருந்தாலும் இதயம் தொட்டு மனசாட்சிப்படி தபால் வாக்குகளானாலும் வாக்குச்சாவடியில் செலுத்த வேண்டிய வாக்குகளானாலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உள்ளத்தில் உறுதிப் படுத்திக் கொண்டு தபால் வாக்குகளை அளித்து வருகிறார்கள்.
ஏப்ரல் 6 நமது எதிர்காலத்திற்கான திருப்புமுனை நாள். அது வாக்குச்சாவடி அல்ல! நமது வாழ்க்கைச் சாவடியாகும்!! அங்கு இருப்பது வாக்குப்பெட்டி அல்ல! இழந்த உரிமைகளை எல்லாம் மீட்டெடுப்பதற்கான வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கின்ற வாழ்க்கைப் பெட்டியாகும்!!
நாட்டையும் பாதுகாக்க வேண்டும்...! கல்வியையும் பாதுகாக்க வேண்டும்...! நமது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்...! என்ற எண்ணத்துடன் வாக்களிப்போம்...!!!
மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளாகும். அந்த நாள் நமது உரிமை மீட்பு நாளாக அமைந்திட வேண்டுமென வரும் வரையில் காத்திருப்போம்.
வினையை விதைத்தவர்கள் வினயை அறுவடை செய்ய வேண்டும்.
*நம்பிக்கை வாழ்த்துக்களுடன் அண்ணன்,*
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.