ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் (தமிழக ஆசிரியர் கூட்டணி), வா.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண் 34462/பிடி/இ1/2020 நாள் 08.06.2021 செயல்முறை கடிதத்தின்படி 14.06.2021 அன்று தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணியாற்ற வேண்டிய பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் அலுவலகப் பணியாளர்கள் மட்டும் சுழல் முறையில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் ஒன்றாம் தேதியே பள்ளிக்குச் சென்று பள்ளிப் பணியினை பார்த்து வந்த பள்ளி தலைமை ஆசிரியர்களும் உண்டு உதவி ஆசிரியர்களும் உண்டு என்பதை தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். பள்ளிப் பணி என்பது கூட்டுப் பொறுப்பில் நடைபெற வேண்டிய ஒன்றாகும். பள்ளித் தலைமை ஆசிரியருடன் பள்ளித் துணை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும் பள்ளிக்குச் சென்றால் தான் பள்ளிப் பணியினை பிரித்து செயல்படுத்த முடியும். பள்ளிக் கல்வித் துறையில் பள்ளித் தலைமையாசிரியர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை இதுவரை வந்ததாக வரலாறு இல்லை. அதேபோல் தொடக்கக் கல்வி இயக்ககத்தைப் பொறுத்தவரையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தான் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், தேர்வுகள் துறை இயக்குனர், எஸ்சிஇஆர்டி இயக்குனர் என தனித்தனியாக இயக்குனர்கள் இயங்கி வருவதால் அவரவர்கள் எல்லைக்குட்பட்டவர்களுக்கு அவரவர்கள்தான் சுற்றறிக்கை அனுப்புவது இது வரையில் நடைமுறையில் இருந்து வரும் மாண்பாகும். ஆட்சிப்பொறுப்பின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதிகாரத் தலைமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆவார் என்பது தங்களுக்கு தெரியாததல்ல. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் செயலாளர்கள் நான்கு பேருக்கும் பணிகள் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது நாம் அறிந்த ஒன்றாகும். மாநில வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கு கூட பணிகள் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். ஒரு நிர்வாகம் செம்மையுற செயல்பட வேண்டுமானால் கரம் கோர்த்து ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி அடைய முடியும் என்பது தங்கள் அனுபவத்திற்கு தெரிந்த ஒன்றே ஆகும். தங்களின் ஆர்வத்தினையும் முழு ஈடுபாட்டினையும் வரவேற்று பாராட்டுகிறோம். ஆனால் அதே நேரத்தில் பள்ளிக்கல்வித்துறையில் நடைமுறையில் இல்லாத வரலாற்றுப் பிழை தொடரக்கூடாது என பெரிதும் விரும்புகிறோம். பள்ளிக் கல்வித் துறையில் 49 ஆண்டுகால பொது வாழ்வு அனுபவத்தின் நடைமுறையினை தங்களிடம் பகிர்ந்து கொள்வது எனது கடமையாகும். தலைமை ஆசிரியர்களுடன் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்குச் செல்வது செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். பள்ளிக்கல்வி துறை ஆணையருடைய வழிகாட்டுதல் குறிப்புரையின் அடிப்படையில் இயக்குனர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவது நடைமுறை பண்பினை மேலோங்கச் செய்யும். இது விமர்சனமல்ல பெற்றுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். தங்களின் விரைவான நடவடிக்கையினை என்றும் வரவேற்றுப் பாராட்டும். இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.