தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7ம் தேதி தொடங்கி, 27ம் தேதி முடிவடைந்தது. இதில் 1,84,762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி ஆன்லைன் விண்ணப்ப பதிவு முழுமை செய்திருந்தனர். சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 29ம் தேதியும், தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான, தரவரிசை பட்டியல் மே 30ம் தேதியும் வெளியிடப்பட்டன. தரவரிசை பட்டியல்கள் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டதுடன், ஒவ்வொரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டன. பிடித்தமான பாடப்பிரிவை செய்வதற்கான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கு ஜூன் 2 மற்றும் 3ம் தேதியும் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 (இன்று) முதல் ஜூன் 14ம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது. முதல்கட்டமாக, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முடிந்து தொடர்ந்து 2ம் கட்டண விண்ணப்ப பதிவும் நடந்து வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 30ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.