You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Aditya l1 Details in Tamil | சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1

Aditya l1 Details in Tamil

Aditya l1 Details in Tamil | சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1

Aditya l1 Details in Tamil

சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் ஆதித்யா-எல்1 விண்வெளி கண்காணிப்பு ஆய்வுக்கூடம் செப்டம்பர் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் காலை 11.50 மணிக்கு விண்வெளிக்கு ஏவப்படுகிறது. ஆதித்யா-எல்1 இந்தியாவிலிருந்து சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் முதல் விண்வெளி ஆய்வக்கூடமாகும்.

சூரியன், நமக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய வான்பொருள் சூரியன். இதன் வயது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது, அதாவது 450 கோடி ஆண்டுகள். சூரியனில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் எரிந்து தொடர்ந்து வினைபுரிந்து கொண்டே இருக்கின்றன.

சூரியன், பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. சூரியன் தான் இந்த சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் சக்தி தரக் கூடிய மிகப் பெரிய ஆற்றல் கொண்டதாக உள்ளது. சூரியனின் ஆற்றல் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ்வது கடினமாகும். அதே போல சூரியனின் ஈர்ப்பு விசை சூரிய குடும்பத்தில் உள்ள அத்தனை கோள்களையும் பிடித்து வைத்துள்ளது.

சூரியனின் மையத்தில் வெப்பமானது 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இந்த உயர் வெப்ப நிலையில் அணு பிணைவு நடைபெற்றுக் கொண்டே இருப்பதால் இது சூரியனை உயிர்ப்புடன் வைத்துள்ளது. சூரியனின் மேற்பரப்பபில் 5500 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும். (40 டிகிரி செல்சியஸிற்கு நமது உடல் வியர்த்துக் கொட்டுகிறது, சோர்வடைகிறது. அப்படி என்றால் 5500° செல்சியஸ் வெப்பத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்) சூரியனில் நிகழும் சூரிய வெடிப்பின் தாக்கம் என்பது செயற்கைக்கோள்களிலும், விண்வெளி செலுத்து வாகனங்களிலும் அதன் தகவல் தொடர்பிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்.

ஒரு வேளை விண்ணில் இருக்கக்கூடிய விண்வெளி வீரர்கள் நேரடியாக சூரிய வெடிப்பின் தாக்கத்தால் உயிரிழப்பை சந்திக்க நேரிடலாம். எனவே இத்தகைய தாக்கங்களை முன்கூட்டி அறிந்து அதற்கான செயல்களில் இறங்குவது சரியான அணுகுமுறையாக இருக்கும்.

சூரியனைக் குறித்து நாம் ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?

சூரியன் தான் நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம் (15 கோடி கி.மீ) என்பதால் மற்ற நட்சத்திரங்களை ஆய்வு செய்வதை விட இதனை நாம் ஆய்வு செய்வது அவசியமாகிறது. சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் நம்முடைய பால் வெளி மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், வேறு சில நட்சத்திரதிரள்களில் உள்ள நட்சத்திரங்களை நாம் தெரிந்து கொள்ள உதவும்.

சூரியனின் வெப்பம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதுகுறித்த ஆய்வுகளை ஒரு ஆய்வகத்தில் நிகழ்த்த முடியாது. எனவே சூரியனை ஒரு ஆய்வகமாக கொண்டு இந்த ஆய்வுகள் நேரடியாக செய்யப்படுகிறது. சூரியனிலிருந்து வெளிப்படும் தொடர் துகள் நிகழ்வு என்பது சூரிய புயல் என்றும் கூறப்படுகிறது. இதில் அதிக அளவிலான புரோட்டான்ஸ் காணப்படும். சூரிய புயல் மட்டுமல்ல, அங்கு நடக்கும் வெடிப்புகள், கொரோனா மாஸ் எஜெக்ஷன் என்ற ஆற்றல் மிக்க கொரோனல் பெரு வெளியேற்றம் ஆகியவை விண்வெளி வானிலையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.

இம்மாதிரியான நிகழ்வுகளின் போது காந்த புலங்கள், மின்னூட்டம் பெற்ற துகள்களும் அருகில் உள்ள கிரகங்களின் மீது ஆதிக்கத்தை செலுத்தி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆற்றல் மிக்க கொரோனல் பெருவெளியேற்றம் நிகழ்வானது பூமியின் காந்தப்புல மண்டலத்தை வெகுவாக பாதிக்கும். மேலும் விண்வெளியில் உள்ள பல்வேறு செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை சேதப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

விண்வெளி வானிலையை கண்டறிவதற்காக நாம் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். மேலும், பூமியை அடுத்துள்ள விண்வெளி பகுதியில் வரும் சூரிய ஒளியின் மாற்றங்களையும் கண்காணித்து வருகிறோம். வேறு சில கிரகங்களில் நிகழும் விண்வெளி வானிலை மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆதித்யா எல்-1 என்ற இந்த செயற்கைக்கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தின் விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல்படும். இந்த விண்கலமானது L-1 என்று அழைக்கக்கூடிய சூரியனின் ஒளிவட்ட பாதையில் உள்ள லெக்ராஞ்சே-1 அதாவது சூரியன் -பூமி சுற்றுப்பாதையில் உள்ள பகுதியாகும். இந்த தொலைவில் ஆய்வகம் செயல்படும் போது அதிலிருந்து கிடைக்கும் பயன் அதிகமாகும். மேலும் எந்தவிதமான தடங்கல் இல்லாமல் தொடர்ந்து சூரியனை கண்காணிக்க கூடிய சாதக அம்சம் உள்ளது. இது கிரகணங்கள் ஏற்படாத பகுதியாகும்.

அது என்ன லெக்ராஞ்சே-1 சுற்றுவட்ட பாதை ?

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் லூயி லெக்ராஞ்சே என்ற கணிதம் மற்றும் வானியல் அறிஞர், பூமி, நிலவு, சூரியன் ஆகியவைகளின் ஈர்ப்பு விசையானது ஏதோ ஒரு புள்ளியில் சமநிலையில் இருக்கும் என்று கண்டறிந்தார். அவரது பெயரில் இந்த சுற்றுவட்டப் பாதை அழைக்கப்படுகிறது. இந்த பாதையில் நிலைநிறுத்தப்படும் பொருட்கள் சம ஈர்ப்புவிசையுடன் சுழன்று வரும், பூமிக்கு முன் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையை L1 என்றும், பூமிக்கு பின்னால் 15 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையை L2 என்று அழைக்கின்றனர். இந்த L2 வில் தான் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டு சுற்றி வந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. L1, L2, L3, L4 மற்றும் L5 என மொத்தம் ஐந்து லாக்ரேஞ்ச் புள்ளிகள் உள்ளன.

பிஎஸ்எல்வி-சி 57 ராக்கெட்

சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி ஆய்வகமான (space-based Indian observatory) ஆதித்யா-எல்1 ஐ ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. பெங்களூருவில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக் கோள் மையத்தில் (யு.ஆர்.எஸ்.சி) உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பி. எஸ். எல்.வி.- சி 57 ராக்கெட் மூலம் இந்த விண்வெளி ஆய்வகம் செப்டம்பர் 2 விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. நான்கு மாத கால பயணத்திற்குப் பிறகு 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லெக்ராஞ்சே-1 சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும்.

சூரியனில் இருந்து தடையற்ற, தொடர்ச்சியான தகவல்களைப் பெற ஆதித்யா ஆய்வகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள L1 லாக்ரேஞ்ச் (Lagrange) புள்ளிக்கு பயணிக்கும்

ஆதித்யா எல்-1

ஆதித்யா எல்1 இல் 7 ஆய்வு கருவிகள் உள்ளன போட்டோஸ் பியர், குரோமோஸ்பியர் சூரியனின் வெளிப்பகுதியை கண்டறியும். எலெக்ட்ரோ மேக்னெட்டிக் மின்காந்த திறன் கருவிகள், துகள்களை கண்டறியும் உணர்விகள் ஆகியவை இதில் அடக்கம். மேலும் L1 சுற்றுப் பாதையில் இருந்து சூரியனை கண்காணிக்கும் நான்கு கருவிகளும் இதில் உள்ளன. இதில் உள்ள மற்ற மூன்று கருவிகள் மின்காந்த துகள்களையும், லெக்ராஞ்சே-1 புள்ளியில் நிகழும் மாற்றங்களையும் கண்டறியும்.

ஆதித்யா எல் 1 - சூரிய வெளிப்பரப்பில் நிகழும் வெப்ப மாற்றங்களை கண்டறியவும், கரோனல் மாஸ் எஜெக்ஷன், சூரிய வெடிப்பு ஆகியவற்றையும் அதன் தன்மைகளையும் அதனால் விண்வெளி வானிலையில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டறிவதுடன் கோள்களுக்கு இடையிலான விண்வெளி வானிலையில் நிகழும் மாற்றத்தையும் இது கண்டறியும்.

இந்த ஆய்வின் நோக்கம்

சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களை கண்டறிய முடியும். ஆற்றல்மிக்க கொரோனல் பெரு வெளியேற்றம் குறித்த புரிதல் ஏற்படும். சூரிய வெடிப்பு மற்றும் பூமியின் விண்வெளி பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவது சாத்தியமாகும். சூரிய வளிமண்டலம் குறித்த முழு தகவல்கள் கிடைக்கும். சூரிய வெடிப்பினால் ஏற்படும் சூரிய புயல் மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் மேலும் அதன் வெப்ப மாறுபாடு குறித்தும் கண்டறிய முடியும்.

ஒருவேளை சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் பூமியை நோக்கி வரும் பட்சத்தில் அது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் குறிப்பாக பூமியின் விண்வெளி வானிலையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து நாம் அறிய முடியும். ஆற்றல்மிக்க கொரோனல் பெரு வெளியேற்றம் குறித்து தொடர் ஆய்வுகளை இதன் மூலம் நிகழ்த்த முடியும். அதன் தரவுகளை தொகுக்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்த விண்வெளி ஆய்வகத்தில் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் L-1 சுற்றுப்பாதையையும் சூரியனிலிருந்து வெளிப்படும் x கதிர்களையும் குறித்த பல்வேறு ஆய்வுகளை செய்ய இருக்கிறது. கிரகங்களுக்கு இடையே லெக்ராஞ்சே புள்ளியில் ஏற்படும் காந்தப்புல மாற்றங்களையும் கண்டறியும். சூரியனைக் குறித்து ஆய்வு செய்ய இருக்கும் கருவிகள் இஸ்ரோவின் பல்வேறு ஆய்வு மையங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 உட்பட இரண்டு வெற்றிகரமான பயணங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த இருக்கும் மிகப்பெரிய திட்டம் ஆதித்யா எல் -1.

ஆதித்யா-எல்1 சூரியனைப் பற்றிய முழுமையான தகவல்கள் தருமா?

இதற்கான பதில் 'இல்லை' என்பது தான். ஆதித்யா-எல்1 மட்டுமல்ல, பொதுவாக எந்த விண்வெளிப் பயணத்திற்கும் இது பொருந்தும். காரணம், விண்வெளியில் ஆய்வுகருவிகளை சுமந்து செல்லும் விண்கலத்தின் குறைந்த நிறை, சக்தி மற்றும் அளவு காரணமாக, குறைந்த திறன் கொண்ட குறைந்த அளவிலான கருவிகளை மட்டுமே விண்கலத்தில் அனுப்ப முடியும். ஆதித்யா-எல்1 அனைத்து அளவீடுகளும் லாக்ரேஞ்ச் L1 இலிருந்து செய்யப்படும். உதாரணமாக, சூரியனின் பல்வேறு நிகழ்வுகள் பல திசையில் உள்ளன, எனவே வெடிக்கும்/வெடிக்கும் நிகழ்வுகளின் ஆற்றலின் திசைப் பரவலை ஆதித்யா-எல்1 ஆல் மட்டும் ஆய்வு செய்ய முடியாது.

சூரியனின் துருவப் பகுதிகள் இதுவரை நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. அத்தகைய ஆய்வுகளுக்கு விண்கலத்தின் சுற்றுப்பாதையை அடைவதில் தொழில்நுட்ப சவால்கள் உள்ளன. சூரிய துருவ இயக்கவியல் மற்றும் காந்தப்புலங்கள், சூரிய சுழற்சி. மேலும், வெவ்வேறு அலைநீளங்களில் சூரிய கதிர்வீச்சுகளின் துருவமுனைப்பு அளவீடுகள் தேவைப்படுகின்றன. இது போன்ற பல சாவல்கள் உள்ளன. எதிர் காலத்தில் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் ஒன்றிணைந்து சூரியனை முழுமையாக ஆய்வு செய்ய முன் வரலாம். அதற்கு ஒரு தொடக்க புள்ளியாக இஸ்ரோவின் இந்த திட்டம் நிச்சயமாக உதவும்.

பா. ஶ்ரீகுமார், அறிவியல் பலகை, சென்னை