Actor Dhamu School Program | மாணவியரை அழ வைக்கும் நிகழ்ச்சி வேண்டாம்
Actor Dhamu School Program
மாணவ, மாணவியரை அழ வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக, நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தும்படி, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார் சார்பில் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் நடிகர்கள் மற்றும் சில தொழில்முறை அல்லாத உளவியலாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஒரு வகையான இசையை ஒலித்து, மாணவ, மாணவியரின் கண்களை மூடச்சொல்லி அவர்களை மெஸ்மரிசம் போன்ற நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
அப்போதும் பெரும்பாலும் மாணவியர், மன ரீதியாக தளர்ந்து கதறி அழுது விடுகின்றனர். இதனால் சிலர் நம்பிக்கை இழந்து துவளும் நிலை உள்ளதாக பெற்றோர் தரப்பில் பள்ளிகளில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
அதன்படி, மாணவ, மாணவியருக்கு ஆலோசனை மற்றும் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளை நடத்தும் முன் நிகழ்ச்சியின்தன்மை, பங்கேற்கும் விருந்தினர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவ, மாணவியாின் எதிர்காலத்தை தன்னம்பிக்கையை, மன ரீதியான துணிச்சலை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதற்குரிய ஆளுமைகளை மட்டும் பங்கேற்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.