தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அவ்வப்போது ஊடகம் வாயிலாக கோரிக்கை வைப்பது நாம் தினமும் காண முடிகிறது. அப்போது தமிழகத்தில் மட்டும்தான் காலிபணியிடங்கள் உள்ளதோ என்ற பிம்பம் மனதில் தோன்றும்.
மத்தியில் இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளதா என்று ஊடகம் வாயிலாககூட நாம் அறிந்திருக்க முடியாது. இந்த நிலையில், மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈசுவரன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை மத்திய அமைச்சகத்திடம் கேட்டு பெற்றுள்ளார். அதில் மத்திய கல்வி அமைச்சகத்தில் தற்போது 754 பேர் பணியாற்றி வருவதாகவும், 326 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,080 பணியிடங்களில் 326 பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரியவந்துள்ளது. இதுதவிர எஸ்சி பிரிவினர்- 195 பேர், எஸ்டி பிரிவினர்- 50 பேர் மற்றும் ஒபிசி பிரிவினர் - 111 பேர் மத்திய கல்வி அமைச்சகத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், நாளிதழுக்கு அளித்த பேட்டியில், " மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு தான் நிர்வகிக்கும் கல்வி அமைச்சகத்திலேயே இவ்வளவு காலிபணியிடம் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே, மத்திய அரசு நிர்வகிக்கும் உயர் கல்வி நிறுவனங்களிலும் காலிபணியிடங்கள் உள்ளது. இப்படியிருக்கும் நிலையில் அதன் நிர்வாக திறன் எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது." அனைத்து காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்னவென்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.