போலி மதிப்பெண் பட்டியல் மூலம் அரசு வேலையில் சேர்ந்த 200 பேர்
மத்திய அரசு துறைகளான அஞ்சல்துறை, சிஆர்பிஎப், இந்திய ஆயில் நிறுவனப் பணிகளில் சேர்வதற்காக கொடுத்த மதிப்பெண் பட்டியல்களில் 200 பட்டியல் போலியானவை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து, போலி மதிப்பெண் பட்டியல்களை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை குற்றத்தடுப்பு போலீசில் தேர்வுத்துறை சார்பில் புகார் கொடுத்துள்ளனர்.
போலி மதிப்பெண் பட்டியல்
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு துறைகளான அஞ்சல் துறையில் தற்போது கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் தெரிந்த மற்றும் தமிழ் படித்தவர்கள் மட்டுமே இந்த பணியில் சேர்க்கப்படுகின்றனர். சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கடந்ந 3 மாதங்களாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தும் பணி நடக்கிறது. ஒன்றிய பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மேற்கண்ட நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலான வட மாநிலத்தில் இருந்து தேர்வானவர்கள் என்று தெரியவந்துள்ளது.
பணியில் சேர்வதற்காக அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்று வைக்கப்பட்டு இருந்த நிலையில், மேற்கண்ட பணியில் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் கல்விச்சான்றுகளை அந்த நிறுவனங்களில் ஒப்படைத்துள்ளனர்.
அதில் சுமார் 200 பேர் கொடுத்திருந்த 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் குளறுபடிகள் இருந்ததை மேற்கண்ட நிறுவனங்கள் கண்டுபிடித்து அதுகுறித்து சரிபார்க்க தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மதிப்பெண் பட்டியல்களில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கொடுத்ததாக சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த மதிப்பெண் பட்டியல்களில் முதல் மொழிபாடமாக இந்தி என்று உள்ளது. மதிப்பெண் பட்டியல்களில் அந்த மாணவர்கள் இந்தியில் கையொப்பம் போட்டுள்ளனர்.
மேலும் மதிப்பெண் பட்டியல்களில் ஸ்டேர் கவர்மெண்ட் போர்டு ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் ஹையர் செகண்டரி எக்சாமினேஷன் என்ற பெயர்கள் அச்சிட்டு இருந்தன. ஆனால் மாணவர்கள் சென்னையில் உள்ள பள்ளிகளில் படித்துள்ளதாக அச்சிடப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அஞ்சல் துறை அதிகாரிகள் அந்த மதிப்பெண் பட்டியல்களை சரிபார்த்து கொடுக்க வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். இதேபோல சிஆர்பிஎப் இந்தியன் ஆயில் உள்ளிட்ட துறை அதிகாரிகளும் அனுப்பி உள்ளனர். சுமார் 200 சான்றுகள் தேர்வுத்துறைக்கு வந்துள்ளன. அவற்றை சரிபார்த்த தேர்வுத்துறை அதிகாரிகள் அவை அனைத்து போலியானவை என்று கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து குற்றவியல் போலீசாருக்கு தேர்வுத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியானவை என்று தேர்வுத்துறை அளித்த அறிக்கையின்படி சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் துறைகளும் தற்போது போலி மதிப்பெண் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது.