நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது: யுஜிசி எச்சரிக்கை
பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று UGC எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 127 நிகர்நிலை கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவன பெயருக்கு பின்னால் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கடந்த 2017 நவம்பரில் UGC தடை விதித்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, UGC விதித்துள்ள தடையை மீறி பல்வேறு நிகர்நிலைக் கல்வி நிறுவனங்கள் தங்கள் இணையதளத்திலும், விளம்பரங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பல்வேறு புகார்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், புகாரின் பேரில் விசாரணை நடத்திய UGC, மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 127 தனியார் நிகர்நிலை கல்வி நிறுவனங்கள், தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நீக்கத் தவறினால் உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று UGC எச்சரிக்கை விடுத்துள்ளது. இனிவரும் நாட்களில் இணையதளம், விளம்பரம் மற்றும் அதிகாரப்பூர்வ கையேடு (LetterPad) நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம் என்று தான் குறிப்பிட வேண்டும் என்றும் UGC உத்தரவிட்டுள்ளது.