You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பொதுத்தேர்வு கட்டணம் மாணவர்கள் எவ்வளவு செலுத்த வேண்டும்?

பொதுத்தேர்வு கட்டணம் மாணவர்கள் எவ்வளவு செலுத்த வேண்டும்?

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மாணவர்களின் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பிப்ரவரி 6ம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறு இருந்தால், பிப்ரவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். பெற்றோர்களிடம் மாணவ, மாணவிகள் விவரங்கள் சரியாக உள்ளது என்று உறுதிமொழி படிவம் பெற வேண்டும். இதேபோன்று, மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் விவரம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்வு கட்டணம் ரூ.100, மதிப்பெண் சான்று கட்டணம் ரூ.10, சேவை கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.115 செலுத்த வேண்டும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வுகள் அடங்கிய பாடத்தொகுப்பு படிப்போர் தேர்வு கட்டணம் ரூ.200, மதிப்பெண் சான்று கட்டணம் ரூ.20, சேவை கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.225 செலுத்த வேண்டும்.

செய்முறை இல்லாத பாடங்கள் அடங்கிய தொகுப்பில் படிப்போர் தேர்வு கட்டணமாக ரூ.150, மதிப்பெண் சான்று கட்டணமாக ரூ.20, சேவை கட்டணமாக ரூ.5 என மொத்தம் ரூ.175 என மாணவர்களிடம் தேர்வு கட்டணம் பெற வேண்டும். தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி தவிர இதர பயிற்று மொழி படிக்கும் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி பிரிவினருக்கும், கண்பார்வையற்றோர், கேட்கும் திறன், பேசும் திறன் அற்றவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.