கொரோனா தொற்று காரணமாக தற்போது வரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து உறுதிப்படுத்தாத தகவல்கள் வலம் வந்துகொண்டிருந்தன, அதற்கும் கல்வி அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தமிழக அரசே தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து எந்த உத்தரவோ, அறிவிப்போ பிறப்பிக்காதபோது, மாங்கனி மாவட்டம், ஊரக கல்வி மாவட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒரு பெண் அலுவலர் ஆய்வு என்று பெயரில், அவரது வட்டாரத்தில் உள்ள அம்மன் பெயர் கொண்ட ஒரு தொடக்க பள்ளியில் இன்று ஆய்வு நடத்தினர். ஆய்வு நடத்தினாலும் பரவாயில்லை, கிராமத்தில் உள்ள அந்த தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை சீருடை அணிந்து, பள்ளிக்கு வலுக்கட்டாயமாக வரவழைத்ததுதான் தற்போது அந்த மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. பெயர் கூற விரும்பாத ஒரு ஆசிரியர் கூறும்போது, கொரோன தொற்று காலத்திலும், ஒரு சில ஆசிரியர்கள் நேரடியாக மாணவர்கள் கிராமத்திற்கு அல்லது வீட்டிற்கோ சென்று சமூக இடைவெளியுடன் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர், ஏனென்றால், அவர்களுக்கான கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக. அதே சமயம், குறைந்தபட்ச கல்வி கூட பல ஏழை மாணவர்களுக்கு இன்னும் கிடைக்காமல் இருப்பது ஆசிரியனாக நான் வருத்தப்படுகிறேன். கல்வியா, உயிரா என்று பொதுநலத்துடன் பார்க்கும்போது, உயிா்தான் முக்கியம். குறிப்பாக, குழந்தைகள் விஷயத்தில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டியுள்ளது. அந்த ஒரு காரணத்திற்காகவே தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இப்படி ஒரு நிலை இருக்கும்போது, அந்த அலுவலர் ஆசிரியர்கள் மூலம் சுமார் 20 மாணவர்களை இன்று (வெள்ளி) பள்ளிக்கு வரவழைத்து, வகுப்பறையில் அமர வைத்து, மாணவர்களிடம் கற்றல் திறனை சோதித்துள்ளார். அரசு உத்தரவு மீறி இவ்வாறு செய்ததே விதிமீறல். இது ஒரு பக்கம் என்றால், இந்த அதிகாரம் யார் இவருக்கு கொடுத்தது என்று தெரியவில்லை. கடந்த ஒரு ஆண்டாக எவ்வித கல்வி கற்றலிமின்றி மாணவர்கள் பரிதவித்த வந்த நிலையில், திடீரென இந்த அலுவலர் பாடபுத்தகத்தை வைத்து சோதிப்பது மாணவர்களை உளவியல் ரீதியாக தாக்குவதாக நாங்கள் கருதுகிறோம். அந்த மாணவர்கள் அந்த நிமிடத்தை எவ்வாறு எதிர்கொண்டிருக்க முடியும், அப்போது அந்த மாணவர்கள் மனநிலை எவ்வாறாக இருந்திருக்கும். கண்டிப்பாக, அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அரசு உத்தரவு அமலில் இருக்கும்போது, இந்த அலுவலர் ஏன் இப்படி செய்தார் சுயவிளம்பரமா அல்லது உண்மையிலேயே ஆர்வகோளாறின் நல்ல நோக்கமா என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை, மாவட்டத்தில் இருக்கும் கல்வி அலுவலர்கள் என்ன செய்கிறார்கள் என்று, தெரியவில்லை, இதுதொடர்பாக கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி, அவருக்கு தகுந்த அறிவுரை கூறி இதுபோன்று இவ்வாறு நடந்துகொள்ளாமல் பார்த்துகொள்ள வேண்டும், என்று ஆசிரியர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.