You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

ஆசிரியர் கலந்தாய்வில் மாற்றம் தேவை, தொடக்க கல்வி இயக்குனருக்கு ஐபெட்டோ வேண்டுகோள்

ஆசிரியர் கலந்தாய்வில் மாற்றம் தேவை, தொடக்க கல்வி இயக்குனருக்கு ஐபெட்டோ வேண்டுகோள்

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணி, வெளியிட்ட அறிக்கை:  

தொடக்கக் கல்விதுறை பிப்ரவரி 18ம் தேதி பதவி உயர்வு  தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் ந.க.எண் 756/டி1/2021 செயல்முறை கடிதம் வரவேற்புக்குரியது. ஆனால் இதுவரையில் பதவி உயர்வில், நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த, வரிசை எண் மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் வரிசை எண் 1. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தில் இருந்து வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு. 2. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடத்திற்கு பதவி உயர்வு (பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்). 3. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு இப்படித்தான் இது வரையில் நடைமுறையில் இருந்து வந்தது.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடத்திற்கு பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரில் (grade seniority) இவர்களின் இரண்டு பதவியில் பணியில் சேர்ந்த தேதியை கணக்கிட்டு பதவி உயர்வு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் ஏற்படின் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரிலிருந்து ஒருவருக்கு பதவி உயர்வு அனுமதிக்கப்படும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இடைநிலை ஆசிரியரிலிருந்து பதவி உயர்வு வழங்கப்படும். இந்த நடைமுறையில் தான் மாறுதல் மற்றும் பதவி உயர்வில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதுதான் சரியான விதியும் நடைமுறையும் ஆகும்.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திருந்திய தெளிவுரை வழங்குமாறு இயக்குனர் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். இயக்குனர் அவர்களும் உடன் சரி பார்த்து ஆவன செய்வதாக நம்மிடம் தெரிவித்தார்கள்.

வட்டார கல்வி அலுவலர்கள்:

வட்டார கல்வி அலுவலர்கள் 57 வயது உடையவர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்கிற தெளிவுரை அதிருப்திக்குரிய செயல்பாடாகும். 1995ல் வந்த அரசாணை பதவி உயர்வு பணியிடமாக இல்லாதபோது வந்த அரசாணையாகும். வட்டார கல்வி அலுவலர் பணி தற்போது பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள்  ஓய்வு பெற உள்ள மூன்று மாத இடைவெளியில் கூட பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு கூட ஓய்வு பெற மூன்று மாத கால இடைவெளியில்  பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.  ஓய்வு பெறும் வயது ஒருநாள் இருந்த நிலையில் பதவி உயர்வில் சென்ற அலுவலர்களின் பெயர்ப்பட்டியலை கூட வெளியிட முடியும். 57 வயது உடையவர்களுக்கு 59 வயது வரை பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆகவே வட்டார கல்வி அலுவலர்கள் பதவி உயர்விலும் சம நீதி வழங்கப்பட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*

கனிவான வேண்டுகோள்:

மலை சுழற்சி மாறுதலில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நீண்டகாலம் பணிமாறுதல் வாய்ப்பில்லாதவர்கள் ஒரு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதின் மூலம் தீர்வு கண்டு இருக்கலாம் என்பதை மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் அவர்களிடமும், மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவரிடமும் அலைபேசியில், இரண்டு நாட்களாக வலியுறுத்தி கேட்டுக் கொண்ட போதும் மேலிடத்திலிருந்து அனுமதி பெற இயலவில்லை என்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். 

*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமார் 460 பேருக்கும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமார் 250 பேருக்கும், பட்டதாரி ஆசிரியர் சுமார் 200 பேருக்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் விதிகளை மீறாமல் வெளிப்படைத்தன்மையுடன் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் நேரடிப்பார்வையில் கண்காணித்திட வேண்டும் என பெரிதும் கேட்டுக் கொண்டோம்.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு முறைப்படி நடைபெறும் என நம்மிடம் தெரிவித்துக் கொண்டார்கள். இயக்குனர் அவர்கள் கருத்தினை வரவேற்று நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மதிப்புமிகு தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்களிடமும் தொடர்பு கொண்டு இந்த கருத்தினை வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.