You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அநீதி இழைக்கும் பள்ளி கல்வித்துறை?, கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

||

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது,

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உரியது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த உரிமையை மேல்நிலை கல்வியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கும் தொடக்க கல்வியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தாரை வார்த்து கொடுக்கும் அநீதியை, பங்கு போட்டு கொடுக்கும் கொடுமையை தமிழக கல்வித்துறை அரங்கேற்றி வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் மொத்தம் 500 ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 500 பேரில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் வெறுமனே 45 பேர்தான். மீதமுள்ள 455 ஆசிரியர்கள் மேல்நிலை கல்வியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள்.

இந்த கொடுமையை, மாபெரும் அநீதியை எங்களுடைய தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த பிரச்னையில், தாங்களும், பள்ளி கல்வித்துறையும் உடனடியாக தலையிட வேண்டுகிறோம். இந்த 1.1.2021 முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள 455 முதுகலை ஆசிரியர்களின் பெயர்களை உடனடியாக நீக்கி, அவர்களுக்கு பதிலாக 455 பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்களை பணிமூப்பு அடிப்படையில் சேர்த்து, அதன்பின், பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திட வேண்டும்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் பெஞ்சில் இறுதி தீர்ப்புக்காக 24.2.2021 அன்று வர இருக்கிறது என்பது தங்களுக்கு தெரிந்ததே.

இன்னும் 7 நாட்களில் அதாவது, 24.2.2021 அன்று இறுதி தீர்ப்புக்கான இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில், வர இருக்கும் நிலையில், அதுவரை காத்திருக்காமல், மிகவும் அவசர கோலத்தில் 20.02.2021 சனிக்கிழமை அன்று உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிாியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நடத்துவது சரிதானா?, முறைதானா? நீங்களே சிந்தித்து பாருங்கள்.

இந்த வழக்குகள் இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், ஒரு தலைபட்சமாக செயல்படுவதும், பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான உரிமையை பறிமுதல் செய்வதும் ஏற்புடையது அல்ல, என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எனவே, தயவு கூர்ந்து, இதில் உடனடியாக தலையிட்டு, 20.02.2021 அன்று நடைபெற உள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வை – தள்ளிவைக்க வேண்டுகிறோம்.

இந்த வழக்கின், இறுதி தீர்ப்பு மிக விரைவில் வெளியாக இருப்பதால் அதுவரை கல்வித்துறை காத்திருப்பதுதான் மிக சரியாக இருக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இவ்வாறு ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் வழங்கிய மனு மூலம் வலியுறுத்தி உள்ளது.