தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை 10 மற்றும் 12 ம் வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடதிட்டங்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்ட வந்தது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படும் காணொளி பார்த்து படிக்க வேண்டும் எனவும், அதே சமயத்தில் ஆசிரியர்கள் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இருந்தபோதிலும், சில அரசு பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்களும் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, கல்வித்துறை மாணவர்களுக்கு சுமை குறைக்கும் வகையில், குறிப்பிட்ட சதவீதம் அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக மூத்த அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பாடங்கள் குறைக்கப்பட்டது. ஆனால், குறைக்கப்பட்ட பாடதிட்டங்களை வெளியிட, கல்வித்துறை மாத கணக்கில் காலதாமதம் செய்து வந்தது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும், தனியார் பள்ளிகள் சார்பில் குறைக்கப்பட்ட பாடதிட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 19ம் தேதி முதல் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைக்கப்பட்ட பாடதிட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தனியார் பள்ளியில் பணியாற்றும் வேதியியல் பாட ஆசிரியை சகுந்தலா கூறும்போது, பாடப்பகுதிகள் குறைக்கப்படும் என அறிவித்த பின்னர், அதனை வெளியிட காலதாமதமாகி வந்தது. பாடங்கள் முழுமையாக ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் பொது தேர்வுக்கு எதை படிக்க வேண்டும், எதை படிக்க கூடாது என குழம்பி வந்தனர். தற்போது குறைக்கப்பட்ட பாட திட்டங்கள் வெளியிடப்பட்டதால், மாணவர்கள் நிம்மதியாகவும், நிதானமாகவும் பாடங்களை படித்து தேர்வுக்கு தயாராக முடியும். இவ்வாறு, அவர் கூறினார். மாணவர் ரூபன் கூறுகையில், ஆன்லைன் வகுப்பால் எந்த ஒரு பாடத்தையும் முழமையாக கற்று கொள்ள முடியவில்லை. நேரடி வகுப்பின் மூலம் என்னை தேர்வுக்கு தயார் செய்யவுள்ளேன். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது குறைக்கப்பட்ட பாடதிட்டம் குறைத்து வகுப்பு ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றார்.