பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்டக் கல்விக் குழு அமைக்கப்படும் என்ற தமிழ் நாடு அரசின் அறிவிப்பைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வரவேற்கிறது.
தேர்தல் வாக்குறுதி என்பதையும் தாண்டி, அயோத்திதாச பண்டிதர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார் உள்ளிட்ட சமூக நீதிப் போராளிகளின் கனவை நனவாக்கும் வகையிலும், தமிழ் நாடு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றிடும் வகையிலும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
தமிழ் நாடு தொடக்கக் கல்விச் சட்டம், 1920, அதன் தொடர்ச்சியாக தொடக்கக் கல்வி விதிகள் 1924, அதன் விளைவாக, கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியைத் தாய் மொழியில் வழங்கிய நீதிக் கட்சி ஆட்சியின் பாரம்பரியத்தில் – சுயமரியாதைச் சுடரின் வெளிச்சத்தில், சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்விக் கொள்கையை, தமிழ் நாட்டின் பண்பாட்டிற்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ற வகையில் அமைந்திட, உயர் மட்டக் கல்விக் குழு அமைக்கும் அறிவிப்பை தமிழ் நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கும், நிதி அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“புதிய கல்விக் கொள்கை மாநிலங்களுக்குப் பொருந்துமா?” என்ற கேள்வியை எழுப்பி, தேசியக் கல்விக் கொள்கை வரைவு விவாதத்தின் போதே அதன் ஆபத்துகளை விளக்கி, கலைஞர் அவர்கள் 23.7.2016 அன்று உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அன்று கலைஞர் எழுப்பிய கேள்விக்கான விடையாக இன்று (13.8.3021) நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவிப்பு அமைந்துள்ளது.
குழு விரைவில் அமைக்கப்பட்டு, தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை, அனைத்து நிலையிலும் சமமான கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திட வழிசெய்யும் கல்விக் கொள்கையைத் தமிழ் நாடு அரசிற்கு அக்குழு உருவாக்கித் தர வேண்டும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சியைப் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
மாநிலக் கல்விக் கொள்கை வகுத்திட உயர் மட்டக் கல்விக் குழு அமைத்திடும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ் நாடு அரசிற்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.