பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் தெரிவித்துள்ளார்
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மரக்கன்று நடும் விழாவில் அமைச்சர் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நீட் தேர்வில் என்ன நடக்கிறது என்பது தெரியும். கேள்வித்தாள் வெளியானது, விலை கொடுத்து கேள்வித்தாள் வாங்கிய விவகாரங்கள் எல்லாம் வெளியில் வந்துள்ளது. அறிவு சார்ந்த படிப்பை படிக்கும்போது, எந்த தடையும் இருக்ககூடாது என்பதுதான் முதல்வரின் விருப்பமாக உள்ளது.
இதற்காகத்தான் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவினர் நீட் தேர்வு விஷயத்தில் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் இந்த தீர்மானம் குறித்து துறை சார்ந்த அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
தமிழ்வழியில் படித்துவிட்டு, எம்பிபிஎஸ் உள்ளிட்ட உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். உயர்கல்வி பெரும்பாலும், ஆங்கில வழியில் தான் பாடதிட்டங்கள் இருக்கிறது. எனவே தமிழ்வழியில் கற்று செல்லும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி பருவத்திலேயே அவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.