மகாராஷ்டிராவில் 100 ஏழை மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ள நிகழ்வு பாராட்டுக்களை குவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி பேருதவி செய்ததன் மூலம் புகழ் பெற்றார் நடிகர் சோனு சூட்.
அதிலிருந்து அவருக்கு சமூக வலைதளங்களில் பலர் கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆந்திராவில் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது என்று அவர் உதவிகளின் பட்டியல் நீளும். அதேபோல, ட்விட்டரில் கோரிக்கை வைக்கும் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.
பல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வசதியான மாணவர்கள் வீடுகளில் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கும் ஏழை மாணவர்களுக்கு சோனு சூட் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்து வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள 6 பள்ளி மாணவர்களுக்கு நேரிலேயே சென்று 100 ஏழை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார். இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களூம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளன.