அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

NSS Activities in Tamil | நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகள்

NSS Activities in Tamil | நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகள்

Table of Contents

NSS Activities in Tamil

ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கி வரும் நாட்டு நலப்பணி திட்டத்தின் செயல்பாடுகளை இரு பிாிவுகளாக பிரிக்கலாம். அவை

  • தினசரி செயல்பாடுகள் (NSS Regular Activities)
  • சிறப்பு முகாம் செயல்பாடுகள் (Special Camp Activities)

தினசரி செயல்பாடுகள்

நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தொண்டர்கள் தான் பயிலும் பள்ளி, கல்லூரி, வசிப்பிடங்களில் இத்திட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதிகளில் செயல்படும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்றவற்றில் வாரத்தின் இறுதி நாட்களில் அல்லது கல்லூரி முடிந்தபின் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவர். இவை அனைத்தும் அவர்களின் தினசரி செயல்பாடுகளாகும். இப்பணிகளின் கால அளவு 120 மணி நேரமாகும். இக்கால அளவை நாட்டு நலப்பணித் திட்ட அணிகளால் எப்பணிகளுக்கு எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பது கீழ்கண்டவாறு பகுக்கப்படுகின்றன.

Read Also: நாட்டு நலப்பணி திட்டம் பணிகள் என்ன

நாட்டு நலப்பணித் திட்டத்தின் தினசரி செயல்பாடுகள் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கான கால அளவு ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

ஆற்றுப்படுத்துதல் மற்றும் கருத்தரங்குகள்

மாணவர் தொண்டர்கள் நாட்டு நலப்பணத் திட்டத்தின் அடிப்படை நிகழ்வுகளை தெரிந்துகொள்வதற்காக 20 மணி நேரம் விளக்க உரைகள், கலந்தாய்வுகள், படக்காட்சிகள் மற்றும் கள ஆய்வுகள் நடைபெறும்.

வளாக வேலைகள்

மாணவ தொண்டா்கள் அவர்கள் சார்ந்துள்ள கல்வி நிறுவனங்களில் மரம் நடுதல், தோட்டம்போடுதல், விளையாட்டு திடல்களை தூய்மை செய்தல், மாணவர்களுக்கு போதை ஒழிப்பு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு அளித்தல், போன்ற செயல்களை செய்வர். மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 30 மணி நேரம் வளாக வேலைகளில் ஈடுபடுவர்.

சமுதாய தொண்டுகள்

மீதமுள்ள 70 மணி நேரத்தை தத்தெடுக்கப்பட்ட கிராமம் மற்றும் குடியிருப்புகளில் தனியாகவோ, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்களுடன் இணைந்தோ சமூக சேவை செய்வதற்காக செலவிடுவார்.

இச்சமுதாய தொண்டுகள் கிழ்கண்டவாறு திட்டங்களாகவும், பணிகளாகவும் பகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

  • கிராமப்புற திட்டம்
  • நகர்ப்புற திட்டம்
  • இயற்கை சீற்றங்கள் மற்றும் நாட்டின் அவசர நிலைகள்
  • தேசிய விழாக்கள்
  • தேசிய திட்டங்கள்
  • பெண்கள் நலம்
  • குழந்தைகள் நலம்
  • முதியோர் நலம்
கிராமப்புற திட்டம்

மாணவர் தொண்டர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று கல்லாமையை ஒழித்தல், நீர் மேலாண்மை, வீண் நிலங்களை மேம்படுத்துதல், வேளாண்மை, சுகாதாரம், தாய் சேய் நலம், குடும்ப நலக்கல்வி அளித்தல், சாலைகள் அமைத்தல், சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வா்.

நகர்ப்புறத் திட்டம்

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் பணிகளுடன் நகர்புறங்களில் கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

முதியோர் கல்வி, முதலுதவி, எச்சரிக்கை கம்பங்கள் நிறுத்துதல், போக்குவரத்து கட்டுப்பாடு, குடிசை வாழ் மக்கள் நலப் பணிகள், மருத்துவமனைகளில சேவை செய்தல், ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை பராமரித்தல், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, மக்கள் தொகை கல்வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு, போதைக்கு எதிரான விழிப்புணர்வு போன்ற பணிகள் நகர்புற மக்களுக்காக, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்ய வேண்டிய பணிகளாகும். இப்பணிகளைச் செய்வதற்கான திட்டங்களை திட்ட அலுவலர்கள் வகுத்தளிப்பார்கள்.

இயற்கை சீற்றங்கள் மற்றும் நாட்டின் அவசர நிலைகள்

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரழிவு காலங்களிலும் செயற்கையாக ஏற்படும் பேரழிவின் அவசர காலங்களிலும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்தல், விடுவித்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவை என்எஸ்எஸ் முக்கிய பணிகள் ஆகும். இதுபோன்ற நிலைகளில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் மாணவர்களை சேவை செய்வதற்கு தேவையான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

தேசிய விழாக்கள்

தேசிய விழாக்களை கொண்டாடுவதும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் பணிகளில் ஒன்று ஆகும். இதன் நோக்கம் தேசிய விழாக்கள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை மாணவர்கள் தெரிந்துகொண்டு, அவ்விழாக்களின் நோக்கத்தைச் செயல்படுத்தும் கருவிகளாக மாணவர்களை உருவாக்குவதாகும். எனவே நாட்டு நலப்பணிதிட்டத்தின் மாணவத் தொண்டர்கள் தேசிய விழாக்களை கொண்டாடுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேசிய திட்டங்கள்

நமது நாட்டில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் சிறப்பு வாய்ந்த திட்டங்களாக மூன்று திட்டங்கள் கருதப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

  • மக்கள் கல்வி திட்டம்
  • எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்டம்
  • நீர் மேலாண்மை மற்றும் வீண் நிலத்தை மேம்படுத்துதல் திட்டம்

பெண்கள் நலம்

பெண் சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பெண்களுக்கு எதிரான குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல், கர்ப்பகால பராமரிப்பினை முறையாக தொடர்ந்து செய்திட ஆலோசனைகளை வழங்குதல், குடும்பக்கட்டுப்பாடு திட்டம் பற்றிய ஆலோசனை வழங்குதல்.

குழந்தைகள் நலம்

குழந்தை பிறப்பினை சரியாக பதிவு செய்வதற்கான ஆலோசனை வழங்குதல், குழந்தைகளுக்காக அரசின் மூலம் இலவசமாக போடப்படும் நோய்தடுப்பு ஊசிகளை சரியான காலங்களில் போடுவதற்கு அறிவுரை வழங்குதல், பள்ளி படிப்பிலிருந்து இடைநிற்றல் தடுத்தல்

முதியோர் நலம்

பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குதல், முதியோர் இல்லங்களில் வாழும் பெரியவர்களுக்கு ஆறுதலாக வாரத்தில் ஒரு முறை அங்கு சென்று அவர்களிடம் உரையாடி வருதல், அரசின் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல், அரசு போக்குவரத்து நிறுவனங்கள் இயக்கும் பேருந்துகளை மற்றும் ரயில் மூலமாக பயணம் செய்வதற்கு கட்டண சலுகை பெற்றுதருதல்,

தோ்ந்தெடுத்த கிராமங்களில் சேவை

மாணவ தொண்டர்கள் சமுதாய பணி செய்வதற்கு முதலில் சேவை செய்ய வேண்டிய கிராமங்களை தேர்வு செய்வது முதல் பணியாகும்.

கிராமங்களை தந்தெடுத்தல்

நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒவ்வொரு அணியினரும் சேவை செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு கிராமத்தை தேர்வு செய்து கொள்வது அவசியமான ஒன்றாகும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம முன்னேற்றத்திற்காகச் செயல்படுவது நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கிராமங்களை தத்தெடுப்பதன் நோக்கம்

கிராமங்களை தத்தெடுத்தல் என்பது நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு சிறந்த அம்சமாகும். அதிகமான இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து சேவைகளையும் செய்து அவற்றை தொடர்ச்சியாகப் பராமரிக்க இயலாமல் பாதியில் விட்டுவிடுவதைவிட ஒரு குறிப்பிட்ட இடத்தை தெரிவு செய்து அங்குள்ள சேவைகளை சரியாக புரிந்துகொண்டு சேவைகளில் ஈடுபடுவது சிறந்தது. இது கிராமங்களை தத்தெடுப்பதன் மூலம் சாத்தியப்படுகிறது.

கிராமத்தை தத்தெடுப்பதன் நோக்கம் என்னவென்றால் கிராமத்தினருக்கு வளர்ச்சி பாதையை அடையாளம் காட்டி அதன் வழியில் அவர்களை முன்னேறச் செய்வதே. ஒரு முறை நாம் அவர்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால் பின் அவர்களே தங்களின் பிரச்னைகளின் தீர்வுகளுக்காக நம்மை நாடுவர்.

கிராமங்களை தத்தெடுப்பதற்கான வழிமுறைகள்

கிராமங்களை தத்தெடுப்பதன் முதற்படியாக ஒரு சில கிராமங்களை தெரிந்தெடுத்து அவற்றில் தலைமை சிறப்பாக உள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் முக்கியமாகத் தெரிவு செய்யப்பட்ட கிராமானது மாணவா்கள் பயிலும் கல்வி நிலையத்தில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்க வேண்டும். இதன் மூலம் தொடர்ச்சியான பணிகள் சாத்தியப்படும்.

தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் என்எஸ்எஸ் செயல்பாடுகள்

நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டில் 70 மணி நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் மற்றும் குடியிருப்புகளில் பணி மேற்கொள்ள வேண்டும். நாட்டு நலப்பணி திட்டத்தின் அடிப்படை நோக்கத்தின்படி ஒரு மாணவ தொண்டர் சமுதாயத்துடன் சிறந்த தொடர்பு வைத்திருத்தல் வேண்டும். இதன் மூலம் ஒரு மாணவ தொண்டர் சமுதாயத்தில் உள்ள மக்களின் தேவையை சரியாக புரிந்துகொள்ள இயலும். மேலும் தங்கள் பணி மேற்கொள்வதற்கான இடத்தையும் புரிந்துகொள்ள இயலும்.

கிராம தலைவர்களை தொடர்பு கொள்ளுதல்

தலைமை சிறப்பாக உள்ள இடங்களில் நமது பணி இலகுவாக முடிந்துவிடும். மேலும் நம் பணி முடிந்த பின்பும் அக்கிராமத்தை கண்காணிக்க ஏதுவாக இருக்கும். எனவே, தேர்வு செய்யப்பட்ட கிராமங்களின் கிராமத் தலைவர்களோடு தொடந்து தொடர்பில் இருப்பது நமது பணியினை எளிமையாக்கும்.

அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுதல்

நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிப்பிட்ட அணியினர் அக்கிராமம் அமைந்துள்ள வட்டாரத்தின் வட்டார அலுவலர், மாவட்ட பஞ்சாயத்து அலுவலர், மாவட்ட மருத்துவ அலுவலர், விவசாய அலுவலர், பாசனத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர் ஆகியோரின் உதவியை பெற்றும் பணிகளை மேற்கொள்ளலாம்.

கிராமத்தை / பகுதியை மதிப்பீடு செய்தல்

கிராம தலைவர்களோடும் அதை நிர்வாகம் செய்யும் அதிகாரிகளோடும் தொடர்பினை ஏற்படுத்தியபின் அதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடுவதற்கு முன் அக்கிராமத்தையும் அக்கிராமம் சார்ந்துள்ள பகுதிகளையும் ஒரு மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் அக்கிராமத்தின் தற்போதைய பிரச்னைகள் மற்றும் தேவைகளை அறிந்து சரியாக திட்டமிட முடியும். இதன் மூலம் அக்கிராமம் வளர்ச்சி பாதையில் முன்னேறும். களப்பணிகளின் மூலம் மாணவர்கள் ஆழ்ந்த சிந்தனையும் எதையும் ஆராயும் தன்மையும் வளர்ச்சியடையும். மேலும் மாணவா்கள் பிரச்சினைகளை அடையாளம் காணும் திறனை பெறுவா்.

கிராம மக்களின் உதவியை பெறுதல்

நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் சமுதாயத்தில் உள்ள மக்களை என்எஸ்எஸ் அணிகளோடு இணைத்து சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபட ஊக்குவிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கான திட்டங்களை ஆராய்ந்து எப்பணியைச் செய்ய வேண்டும் என்ற முடிவினை எடுக்க வேண்டும். இம்முடிவினை எடுப்பதற்காக கிராம மக்கள் மற்றும் கிராமத் தலைவர்களின் உதவியோடு செய்யப்பட வேண்டியவற்றை தொிந்து அதற்கு மக்களின் உதவியை நாட வேண்டும்.

அரசின் திட்டங்களை கிராமத்திற்கு எடுத்து செல்லுதல்

மாணவத் தொண்டர்களின் முக்கிய பணிகளுள் ஒன்று சமீப காலத்திய வேளாண் முன்னேற்றங்கள், பாசன வசதிகள், களர் நிலப் பயன்பாடு. எரிசக்தி புதுப்பித்தல், இலவச கட்டுமான பணிகள், சுகாதாரம், தனிமனித சுத்தம், ஊட்டசத்து, சுய உதவிக்குழுக்கள், வருவாய் பெருக்கும் திட்டங்கள், அரசு உதவிகள், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி தகவல் சேகரித்தலாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த முடியும்.

திட்டங்களின் முடிவு

மேற்குறிப்பிட்டபடி, திட்ட அலுவலர் திட்டங்களை கவனமாக தெரிந்துகொள்ள வேண்டும். அத்திட்டங்கள் கண்டிப்பாக முடிக்கக்கூடியவையாக இருத்தல் வேண்டும். முடிவு சிறப்பானதாக அமைத்தல் சமுதாயத்தினரின் நம்பிக்கை மற்றும் பாராட்டுகளை பெற முடியும்.

திட்டங்களை மதிப்பிடுதல்

அனைத்து திட்டங்களும், அவை முடிக்கப்பெற்றபின் மதிப்பீடு செய்யவேண்டும். இம்மதிப்பீட்டை சமுதாய அங்கத்தினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் மேற்கொள்ளலாம். இம்மதிப்பீடு மூலம் திட்டத்தில் இருந்த நிறை குறைகளை அறிந்துகொண்டு அடுத்த திட்டத்தை அதுபோன்ற குறைகளை இன்றி வடிவமைக்க வேண்டும்.

குடியிருப்புகளை தேர்ந்தெடுத்தல் 

நெருக்கடி மிகுந்த நகரப்பகுதிகளில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வசிக்கின்ற இருப்பிடங்கள் சேரி என அழைக்கப்படுகிறது. பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் நகரம் சார்ந்த பகுதிகள் அமைந்துள்ளன. எனவே இந்நிறுவனங்களில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்ட அணியினர் கிராமங்களை தேர்வு செய்வதை காட்டிலும் குடியிருப்பு தேர்வு செய்வதே சிறந்ததாகும். இதன் மூலம் கிராமங்களை அடிக்கடி சென்று சந்திக்க முடியாமை குடியிருப்புகளை தத்தெடுப்பதன் வழி தவிர்க்கப்படுகிறது.

குடியிருப்புகளில் செய்ய வேண்டிய பணிகள்

அதிகமாக மக்கள் கூட்டம் அடங்கிய பகுதிகளைத் தேர்வு செய்த நாட்டு நலப்பணித் திட்ட பணிகளின் கீழ் செயல்படும். மாணவ தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் கீழ்கண்டவாறு அமைகின்றன.

சமூக விசாரணையாளராக

மாணவர்கள் குடியிருப்புகளில் வாழும் பலதரப்பட்ட, பல வேலைகள் செய்யும், பல்வேறு வாழ்க்கை முறைகளை உடைய மக்களை குறித்தான ஒரு தகவல் தொகுப்பை உண்டு பன்ன வேண்டும்.

சமூக பணியாளராக

மாணவர்கள் அம்மக்களின் தலைவரையும் நகராட்சி, மாநகராட்சி தன்னார்வலர்களையும் தொடர்பு கொண்டு அம்மக்களுக்கு தங்கள் சேவை எவ்வகைகளில் பயன்படும் என அறிய வேண்டும்.

திட்ட பணியாளராக

மாணவர்கள் இலவச பஸ் பாஸ் விநியோகம், ஊட்டச்சத்து விழிப்புணர்வு வகுப்புகள், இளையோர் மற்றும் முதியோர் கல்வி, நோய் தடுப்பு, சுகாதார மையம், குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவற்றை அமைக்க உதவலாம். மேலும் இளைஞர் குழுக்கள், மகிலா மண்டல் ஆகியவற்றை அமைப்பதிலும் உதவலாம்.

சமூக ஒருங்கிணைப்பாளராக

நாட்ட நலப்பணி திட்ட மாணவர்கள் குடியிருப்பு வாழ் மக்களிடம் தங்களுக்கு ஒரு நன் மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றபின் அவர்களை ஒரு குழுவாக உருவாக்கி வேற்றுமைகளைக் களைந்து அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அவர்களே தீர்த்துகொள்ளும் வழிகாண வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு

நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான செயல்களில் ஒன்று கிராமங்களைத் தத்தெடுத்தல் மற்றும் குடியிருப்புகளைத் தத்தெடுத்தல். தத்தெடுத்த பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அதிக பணம் செலவாகும். அதை ஈடுகட்டும் நிதி ஆதாரம் நாட்டு நலப்பணித்திட்டத்தில் இல்லை. எனவே, தொண்டு நிறுவனங்களில் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் சிறந்த தொடர்பில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இதன் மூலம் திட்டத்தை முடிப்பதற்கான நிதி உதவிகள் மற்றும் பிற உதவுகளையும் அவர்களிடம் இருந்து பெற முடியும். அரசின் பல துறைகளான வனத்துறை, வேளாண்மை துறை, முதியோர் கல்வித்துறை, சுகாதாரத்துறை, குடும்பம் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆகியவற்றிடம் இருந்து நாம் பலவித உதவிகளைப் பெற முடியும். தொண்டு நிறுவனங்கள் மூலம் கிராம மக்களிடம் நாம் ஒரு சிறந்த அறிமுகத்தைப் பெற முடியும். முதியோர் கல்வி, சுய உதவிக்குழுக்கள், மகிலா மண்டலங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டு நலப்பணித் திட்டம் மிக அரிய பணிகளைச் செய்ய இயலும். மேலும் சமுதாய மையங்கள், உண்டு உறைவிடப் பள்ளிகள், ஊனமுற்றோர் நலப்பணிகள் ஆகியவற்றின் மூலமாகவும், நாட்டு நலப்பணித் திட்டம் சிறந்த பணிகளை செய்ய இயலும். நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்கள் கண்டிப்பாக தாங்கள் சேவை செய்யும் மக்களை குறித்தான மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

நாட்டு நலப்பணித் தொண்டர்கள் ஓய்வாக இருக்கும் நேரங்களில் இத்தகையை சேவைகளை செய்யுமாறு நாட்டு நலப்பணித்திட்டத்தின் திட்ட அலுவலர்கள் திட்டமிட வேண்டும். வார இறுதிகளில் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களை பார்வையிடுவது அங்கு உள்ள மக்களை சந்தித்து, கலந்துரையாடி அவா்களின் பிரச்சினைகளை நாம் அறிந்து கொள்ள உதவும். இதன் மூலம் நம் சேவைகளின் பலன் மக்களை பெரிய அளவில் சென்றைடையும், ஒரு நாள் முகாம்களும் தொடர்ச்சியான சந்திப்புகளும் இத்தகையை தொடர்புக்கு வழிவகுக்கின்றன.

2 முகாம் செயல்பாடுகள்

முகாம் நடத்துதலை ஒரு நாள் முகாம், சிறப்பு முகாம் என இரண்டு வகைகளான பிரிக்கலாம். சிறப்பு முகாம் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஒரு நாள் முகாம் பற்றிய செய்திகளை தொடர்ந்து விளக்கப்பட்டுள்ளன.

ஒரு நாள் முகாம்

சில பல்கலைக்கழகங்கள் நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்கள் 120 மணி நேர சேவைகளில் ஈடுபடுவது அவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கருதின. எனவே, அதைத் தீர்க்கும் வகையில் ஒரு நாள் முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஒரு நாளில் 8 மணி நேரம் பணி மேற்கொள்வர். இந்த ஒரு நாள் முகாம்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நடத்தப்படும். இதன் மூலம் இரண்டே வாரங்களில் 16 மணி நேரம் பணி மேற்கொள்ள முடியும். ஆனால், மிக அவசியம் எனக் கருதப்படும் நேரங்களில் மட்டுமே இம்முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

சிறப்பு முகாம்

என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு ஒரு சிறந்த பரிமாணத்தைத் தந்துள்ளன. இம்முகாம்கள் மாணவர்கள் கிராமங்களில் தங்கியிருந்து அம்மக்களின் சூழ்நிலைகளை அறிந்து தொண்டு செய்வதற்கு சிறந்த சூழலை ஏற்படுத்தி கொடுக்கின்றன. இவை இளைஞர்கள் இடையே புதுமையான எண்ணத்தைத் தருகின்றன. அவர்கள் இடையே குழு வாழ்வு, ஒற்றுமை, பகிர்ந்துகொள்ளுதல், சகிப்பு தன்மை மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இச்சிறப்பு முகாம்கள் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டத்தின் அமைதியுடன் ஏழு நாட்கள் ஒரே கிராமத்தில் தங்கியிருந்து செயல்படும் உண்டு, உறைவிட முகாம்களாக நடத்தப்பெறுகின்றன. இம்முகாம்கள் முன்னர் பத்து நாள் முகாம்களாக நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

NSS Activities in Tamil
NSS Activities in Tamil

பல்வேறு நோக்கங்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தேசிய அளவிலும்,  மாநில அளவிலும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அளவிலும் நடத்தப்படும் ஒவ்வொரு சிறப்பு முகாம்களும் குறிப்பிட்ட இலக்கை மையமாக வைத்து நடத்தப்பட்டுள்ளன. அவை

  • பஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள்
  • அழுக்கு மற்றும் நோயை எதிர்க்கும் இளைஞர்கள்
  • கிராமப்புற சீரமைப்பில் இளைஞர்கள்
  • சூழல் மேம்பாட்டில் இளைஞர்கள்
  • கல்வியில் இளைஞர்கள்
  • தேசிய ஒற்றுமையில் இளைஞர்கள்
  • சுகாதாரத்தில் இளைஞர்கள்
  • வளமான இந்தியாவிற்கு நலமான இளைஞர்கள்
  • விழிப்புணர்வு உருவாக்குவதில் இளைஞர்கள்
  • ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு என்எஸ்எஸ் அணியிலிருந்து 50 சதவீதம் மாணவர்கள் சிறப்பு முகாம்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

சிறப்பு முகாம் செயல்பாடுகள்

நாட்டு நலப்பணித் திட்டத்தின் தொண்டர்கள் 80 மணி நேரம் இச்சிறப்பு முகாம்களின் மூலம் குறிப்பிட்ட கிராமங்களில் தங்கிப் பணி செய்தல் வேண்டும். சிறப்பு முகாம்கள் இளைஞர்களை 7 நாட்கள் சமுதாயத்தோடு வாழச் செய்து அக்கிராம மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்துகொள்ளச் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட செயல்களை மையமாக வைத்து நடைபெறும்.

அத்தகைய சில நடவடிக்கைகள் கீழ்கண்டவாறு அமைகின்றன.

பொதுவான செயல்பாடுகள்

  • மரம் நடுதல், அவற்றை பாதுகாத்து வளர்த்தல். குறிப்பாக ஒவ்வொரு என்எஸ்எஸ் அணியும் குறைந்தது 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
  • என்எஸ்எஸ் பூங்கா மற்றும் வனங்களை உருவாக்குதல்
  • கிராமத்து சாலைகள், கழிவுநீர் ஒடைகள் ஆகியவற்றை உருவாக்கி கிராம சுகாதாரத்தை மேம்படுத்துதல்
  • வீடுகள் தோறும் தனிநபர் கழிவறைகளை ஏற்படுத்துதல்
  • புதுப்பிக்கதக்க எரிசக்தியை பயன்படுத்த கிராமத்து மக்களை ஊக்கப்படுத்தி அவற்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ளுதல்
  • சுற்றுப்புற சுகாதாரம், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை செய்தல். மக்கும், மக்காத குப்பைகளப பிரித்து அகற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • மண்ணரிப்பை தடுத்தல் மற்றும் மண் வள மேம்பாட்டை ஊக்குவித்தல்
  • நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் களர் நில மேம்பாடு
  • கலாச்சார சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் அவற்றைப் பற்றிய மக்களின் கவனத்தை மேம்படுத்துதல்

சுகாதாரம் பேணும் செயல்பாடுகள்

  • உடல்நலம், குடும்ப நலம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல்
  • சுகாதாரத் துறையின் மூலமாகச் செயல்படுத்தப்படும் மக்கள் நோய் தடுப்பு திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லுதல்
  • மருத்துவக் கல்லூரி மற்றும் வீட்டு அறிவியல் மூலம் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய செய்திகளை கொண்டு செல்லுதல்

பெண்களுக்கான சேவை

  • பெண்கள் உரிமைகள் மற்றும் சலுகைகள் அரசியலமைப்பு மற்றும் நீதி அடிப்படையில் அவர்களுக்கு எடுத்துரைத்தல்
  • பெண்களிடம் தாங்களும் சமுதாயத்திற்கு துணைபுரிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துதல்
  • தங்களுகென்ற சுயதொழில் ஏற்படுத்திக்கொள்ளும் விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல்
  • பெண்களுக்கு தையல், எம்ப்ராய்டரி பயிற்சிகளை கற்றுக்கொள்ள வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தல்

சமூக சேவை

அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்

  • மருத்துவமனை வார்டுகளில் உள் நோயாளிகளாகச் சிசிக்சை பெறும் நோயாளிகளின் படுக்கைகளைவ் சுத்தம் செய்து அவற்றை சரி செய்தல், நோயாளிகளோடு உரையாடுதல் வெளி நோயாளிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் மருத்துவமனை விதிமுறைகளை நோயாளிகளுக்கு எடுத்துரைத்தல் போன்ற சேவைகளை மருத்துவ அதிகாரிகளின் அனுமதியுடன் செய்தல்
  • குழந்தை நல மையங்களில் பணியாற்றுதல்
  • உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான நிறுவனங்களில் பணியாற்றுதல்
  • இரத்ததான முகாம்களில் பணியாற்றுவதோடு இரத்ததானம் செய்தல்
  • கண்சிகிச்சை முகாம்களில் பணியாற்றுதல்
  • குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்தல்
  • தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுதல்

விவசாயிகளுக்கான சேவைகள்

  • வேளாண் துறையின் மூலமாகச் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களை மக்களுக்கு அறிவுறுத்தல்
  • பூச்சி தடுப்புத் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி அவற்றை மேற்கொள்வதற்குத் துணை செய்தல்
  • களைச் செடிகளை தடுப்பது மற்றும் அகற்றுவதற்கான புதிய யுக்திகளை அறிமுகம் செய்தல்
  • கூட்டுறவு மையங்களை உருவாக்கி அதன் வாயிலாகப் பயன்பெற விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • புதிய வேளாண் கருவிகளை அரசு மானியத்தில் வாங்குவதற்கு ஊக்கப்படுத்துதல்
  • பண்ணை வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
  • வங்கிகளில் விவசாயக் கடன் பெறுவதற்கு துணை புரிதல்

பேரழிவு கால மீட்பு பணிகள்

இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் மாணவர்களின் மக்களின் அவலங்களை பகிர்ந்து கொள்ள இயலும். இதுபோன்ற நிகழ்வுகளில் பங்குபெறும்போது அவர்கள் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். இதுபோன்ற கோர நிகழ்வுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு கீழ்கண்ட சேவைகளை அளிக்கலாம்.

  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குதல்
  • அவர்களுக்கு முதலுதவி அளித்தல் மற்றும் நோய்தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல்
  • சாலைகள் மற்றும் குடிசைகளின் மறுகட்டுமானப் பணிகளில் இணைந்து செயல்படுதல்
  • பழைய உடைகள் மற்றும் பயன்பாட்டுப் பொருட்களை சேகரித்து அவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல்

கல்வி மற்றும் பொழுதுபோக்கு

  • முதியோர் கல்வியில் இணைந்து எழுதப்படிக்கத் தெரியாத வயது வந்தோருக்கு கற்பித்தல்
  • குழந்தைகளுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை உருவாக்குதல்
  • பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரக் கல்வி
  • கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல் மக்களையும் அவற்றில் ஈடுபடச் செய்தல். இதன் மூலம் மீடியாக்களின் கவனத்ைத ஈர்த்தல்.
  • இளைஞர் குழுக்களை உருவாக்குதல், நேரு யுவகேந்திராவுடன் இணைந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை இலக்கிய போட்டிகள் நடத்துதல்
  • மூடநம்பிக்கை, தீண்டாமை, சாதியம் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்குதல்
  • கிராமப்புற இளைஞர்களுக்கு கல்வி அளித்தல்
  • நுகர்வோர் விழிப்புணர்வு அளித்தல்
  • போன்ற பணிகளை மேற்கொள்வதோடு இதனுடன் தொடர்புடைய பிற பணிகளையும் மேற்கொள்ளலாம்.
அன்றாடப் பணிகளின் நோக்கங்கள்

நாட்டு நலப்பணித் திட்டத்தில் அன்றாட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட கால அளவு 120 மணி நேரமாகும்.

இக்கால அளவின் அடிப்படையில் ஒரு ஆண்டிற்கான தினசரி செயல்பாடுகளை அமைதல் வேண்டும். இந்த தினசரி செயல்பாடுகள் கீழ்கண்ட நோக்கங்களை மையமாக கொண்டு அமைகின்றன.

  • நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆளுமைப் பண்பு உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
  • மாணவ தொண்டர்களை சேவை மனப்பான்மை உடையவர்களாக உருவாக்குதல்
  • கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குதல்
  • சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தனக்கான வாழாமல் மற்றவர்களுக்காக வாழக்கூடிய எண்ணத்தை வளர்த்தல்
  • சமுதாயத்தில் ஆதரவற்றோர்களுக்காக உதவிகளை செய்தல்
  • போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • சிறியோர், பெரியோர் மற்றும் இளைஞர்களின் சுகாதாரத்தை பேணிக் காப்பதற்கான விழிப்புணர்வை வழங்குதல்
  • நோயற்ற வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படல்
சிறப்பு முகாம்கள் நோக்கங்கள்
  • சிறப்பு முகாம்களின் முக்கிய நோக்கம் இளைஞர்களை சமுதாயத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஆகும்.
  • அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ற கல்வியை மக்கள் பெறுமாறு செய்தல். பல்கலை, கல்லூரி, பள்ளிகளின் பாடங்களை மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புடையாக மாற்றுதல்
  • மாணவர்களே திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வழிவகை செய்தல். இத்திட்டங்கள் கிராமப்புறம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்களின் நலனுக்காக மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் பல்வேறு வாழ்க்கை தரத்தை உயர்த்துபவையாக இருத்தல் வேண்டும்.
  • இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து பணி செய்தல். இதன்மூலம் அவர்களிடையே ஒழுக்கம், ஒற்றுமை உணர்வு, சமூக உணர்வை ஆகியவற்றை வளர்க்க இயலும்.
  • முகாமில் உள்ள மாணவத் தொண்டர்கள் மற்றும் உள்ளுர் தொண்டர்களிடையே ஒரு தலைவராக தேர்ந்தெடுத்தல். இதன் மூலம் அவர்களிடையே உற்சாகம் பரவும். உள்ளுர் இளைஞர்களின் ஒருவரை தேர்ந்தெடுப்பது மேலும் சிறப்பாக அமையும்.
  • உழைப்பின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, ஒன்றாய்ச் சோ்ந்து பலத்தை வெளிப்படுத்துவதன் மூலம் கிடைக்கக்கூடிய வெற்றி ஆகியவற்றை மக்களுக்கு தெரிவித்தல்.
  • இளைஞர் நாட்டு வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாகவும் சுயநலம் அற்றவர்களாகவும் உருவாக்குதல்.

Related Articles

Latest Posts