கொரோனா பரவல் காரணமாக, 2019 மார்ச் முதல் பள்ள, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டில் ஜூன் முதல் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே டிசம்பர் 2ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன.
இந்த நிலையில் 10 மற்றும் 12மு் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையொட்டி, பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதற்கான சிறப்பு பேருந்துகளும் தமிழக முழுவதும் இயக்கப்படுகின்றன. பொங்கல் விடுப்பு முடிந்து, வெளியூர்களுக்கு சென்றவர் வரும் 18, 19ம் தேதிகளில் அவரவர் வசிப்பிடங்களுக்கு திரும்புவார்கள். இதையொட்டி அனைத்து தனியார் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளன. மீண்டும் வரும் 20ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளன. அனைத்து வகை பள்ளிகளும், ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், 20ம் தேதி மீண்டும் வகுப்புகளை துவங்க வேண்டும், என பள்ளி நிர்வாகத்தினருக்கு, பள்ளி கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். விடுமுறை நாட்களில் பாடங்களில் நடத்தினால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.