ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மாவட்ட அளவில் தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே சமயத்தில் அதிகாரிகள் தேவையில்லாத மன உளைச்சல் தருவதாக ஆசிரியர்கள் அதிருப்தி 'டாக்' நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறாக, ஒரு ஆசிரியர் தனது குமுறலை வாட்ஸப் வாயிலாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவு அப்படியே உங்கள் பார்வைக்காக....
தேர்தல் பணி தவிர்க்க இயலாத மகத்தான பணி என்றாலும் இப்போது பழி வாங்கும் பணி போல் உள்ளது.
- ஏப்ரல் 6 தேர்தல் பணிக்கு 4 ஆம் தேதியே ஆயத்தமாக வேண்டும்.
- 5 ஆம் தேதி காலையில் புறப்பட வேண்டும்.
- அதிகபட்சமாக 100 கி.மீ வரை செல்ல வேண்டும்.
அது நமக்கு பரிச்சயமில்லாத ஒரு குக்கிராமமாக கூட இருக்கலாம். இருப்பினும் தேர்தல் பணிக்கு நாம் தயார்தான் மறுப்பதில்லை.
பெண் ஆசிரியைகள் என்ன செய்ய இயலும்?
- பஸ் வசதி பிரச்சனை, கொரோனா பிரச்சனை, சொல்ல இயலாத இடர்பாடுகள்...
- 12 மணி தேர்தல் பணி 5 ஆம் தேதி காலையில் புறப்பட்டு இடத்தை கண்டுபிடித்து சேர்வதற்கே சிலருக்கு இரவாகி விடுகிறது.
- தேர்தல் பணிக்கான தளவாடங்களை அதிகாரிகள் எப்போது கொண்டு வருவார்கள் என வழி மேல் விழி வைத்து காத்திருக்க வேண்டும்.
- பின் தேர்தல் தொடர்பான பணிகளை எல்லாம் ஒரு குழுவாக செய்து முடித்த பிறகு இரவு உறங்குவது என்பது இயலாத ஒன்றே.
- காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு எனில் அதிகாலை 4 மணிக்கே எழுந்து ஆயத்தமாக வேண்டும் இதுதான் நிலை.
- எந்த பணியையும் 12 மணிநேரம் தொடர்ந்து பார்ப்பதற்கு ஒரு சிலரால் மட்டுமே இயலும்.
பெண் ஆசிரியைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் உண்டு என்பதும் , அது போல் உடல் நிலை சரியில்லாத ஆசிரியர்களும் உண்டு என்பதையும் தேர்தல் ஆணையம் அறிந்த ஒன்று தானே. பின் ஏன் இந்த நிலை?
தேர்தல் ஆணையம் தேர்தலுக்குள்:
- கிராமத்திற்குள் செல்பவர்களுக்கு, வெகுதூரம் செல்பவர்களுக்கும் பேருந்து வசதி அல்லது ஆட்டோ வசதிகள் இல்லையேல் ஏதேனும் ஒரு வாகன வசதி செய்து கொடுத்தால் நல்லது.
- கொரோனா தமிழகத்தில் பரவுவதாக சொல்லிவிட்டு இப்படி அங்கும் இங்கும் ஓட வைப்பது நியாயமா?
- கணவனை இழந்த ஆசிரியை ஒருவரை ஒரு வாரத்திற்குள் தேர்தல் பணிக்கு அழைப்பது சரியா?
- உடல்நிலை சரியில்லா ஆசிரிய ஆசிரியைகளையும் விபத்துக்கு உள்ளானவர்களையும் பல நாட்கள் அலைய வேண்டிய நிலை வேதனையாக உள்ளது.
- எப்போதும் எந்த துறையாக இருந்தாலும் அடிப்படையில் உள்ள பிரச்சனைகளை மேல் அதிகாரிகளுக்கு எடுத்து கூறுவதன் மூலமே சரி செய்ய இயலும்.
- ஒலிபெருக்கி போல் சொல்வதை வாங்கி சொல்வதால் தான் இத்தனை இடையூறுகள்.
- காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவேளை இல்லாமல் வாக்குப்பதிவு என்பது கொடுமையானது.
- 7 மணிக்கு வாக்குப்பதிவு முடித்து அத்தனை படிவங்களையும் எழுதி முடிக்க 8 மணி ஆகிவிடும்.
- ஒரு மண்டல அலுவலருக்கு 19 பூத்துகள் வரை வழங்கப்பட்டுள்ளது.
- அவர்கள் பெட்டி எடுக்க அடுத்த நாள் அதிகாலை வரை காத்திருக்க வேண்டும்.
- நள்ளிரவில் கால் டாக்சி பிடித்து தான் வீடு திரும்ப வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விஷயங்கள் தமிழக தேர்தல் ஆணையம் அறிந்து, அதன் பாதகங்களை மட்டும் சரி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.