அரசு பள்ளி ஆசிரியா்களுக்கு இப்படி ஒரு சோதனையா?
(குறிப்பு - இது வாட்ஸப் பதிவு)
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் குமாரபாளையம் நடுநிலைப்பள்ளியில் உதவி ஆசிரியரை தலைமை ஆசிரியர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும் அதனால் மன உளைச்சல் அடைந்த உதவி ஆசிரியர் வகுப்பறையில் மயக்கமடைந்து பின்னர் சக ஆசிரியர் மற்றும் மயக்கமடைந்த ஆசிரியரின் கணவர் ஆகியோர் சேர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. உதவி ஆசிரியர் மயக்கம் அடைந்த நிலையிலும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலையிலும் பள்ளித் தலைமை ஆசிரியர் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியரின் கணவர் வட்டாரக் கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியர், வெள்ளியணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகியோர் இடத்தில் புகார் அளித்துள்ளார்.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தாந்தோணி வட்டார கல்வி அலுவலரை அழைத்து இது குறித்து விசாரித்தும் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் நலனை விசாரித்தும் தகவல் தருமாறு பணித்துள்ளார்.
வட்டாரக் கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நலம் விசாரித்தும் தலைமை ஆசிரியரை சந்தித்து விசாரித்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்பித்துள்ளார். இந்த செய்தி பத்திரிக்கையில் வெளிவந்த நிலையில் உரிய அலுவலரிடத்தில் புகார் செய்யாமல் பத்திரிக்கைக்கு செய்தி தந்ததாக மயக்கமடைந்த உதவி ஆசிரியருக்கு பிரிவு 17 (அ) வின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு பிரிவு 17 (ஆ) வின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைக் குறித்து பள்ளியின் சக ஆசிரியர்கள் கூறுகையில் அந்த தலைமை ஆசிரியர் தரக் குறைவாக திட்டுவது வழக்கமான நிகழ்வுதான் என்று கூறுகின்றனர்.
இந்நிகழ்வில் உதவி ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் அவரவர் சார்ந்த சங்கங்கள் மூலமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சரிசெய்ய முடியாத பட்சத்தில், அனைத்து சங்கங்களும் சேர்ந்து உண்மையில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு நியாயம் தேடித்தர ஒன்றுபட்டு போராட வேண்டும். அதை விடுத்து தலைமை ஆசிரியர்களை உதவி ஆசிரியர்கள் இடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் வண்ணம் தாந்தோணி ஒன்றிய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுப்பது சரியான நடைமுறை அல்ல. இது ஆசிரியர்கள் இடத்திலும் ஆசிரியர் சங்கங்கள் இடத்திலும் உள்ள ஒற்றுமையை குழைக்கும் விதமாக உள்ளது. எனவே இந்நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சார்ந்த தனிச் சங்க நடவடிக்கைகளின் மூலம் தீர்வு இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட கிளை களமிறங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
- வட்டாரச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தாந்தோணி.