முதுநிலை மருத்துவ படிப்புக்கான, ஐ.என்.ஐ - சி.இ.டி நுழைவுதேர்வுக்கு, தமிழுக்கு தேர்வு மையங்கள் ஏற்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது : எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, ஜிப்மர் மருத்துவக்கல்லூரி உட்பட சில கல்லூரிகளில், முதுநிலை மருத்துவ படிப்பில், மாணவர்களை சேர்க்க ஐ.என்.ஐ - சி.இ.டி ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு வரும் 20ம் தேதி நடக்க உள்ளது. தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து முறையாக இணைப்பு இல்லை. தமிழக மாணவர்கள் 175 கி.மீ முதல் 250 கி.மீ வரை பயணித்து, அங்கு செல்ல வேண்டியுள்ளது. இதை தடுக்க, தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.